தூத்துக்குடியில் உகந்த உணவு விழிப்புணர்வு கண்காட்சி


தூத்துக்குடியில் உகந்த உணவு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை உகந்த உணவு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறுதானிய உணவுகள், 75 வகையான தோசைகள் போன்றவற்றை பொதுமக்கள் வாங்கி ருசித்தனர்.

கண்காட்சி

இந்திய தேசத்தின் 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் உணவு பாதுகாப்புத் துறை, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்துடன் இணைந்து உகந்த உணவு விழிப்புணர்வு கண்காட்சியை நடத்தியது. இந்த கண்காட்சி தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் நேற்று காலையில் தொடங்கியது. தொடக்க விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார்.

மதிய உணவு அவசியம்

அப்போது, நாட்டில் 50 சதவீதம் வளர் இளம் பெண்களுக்கு ரத்தசோகை உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அவர்கள் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு சாப்பிட்டால் ரத்தசோகை சரியாகிவிடும். ஆகையால் மாணவ, மாணவிகள் மதிய உணவு சாப்பிட வேண்டும், என்று கூறினார்.

75 வகை தோசைகள்

தொடர்ந்து டாக்டர் கு.சிவராமன் கலந்து கொண்டு பேசினார். அங்கன்வாடி பணியாளர்களுக்கு உணவு சமையல் போட்டிகளை ஷெப் தாமு நடத்தினார். தமிழாசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில், சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. கண்காட்சியில், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள், மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், பிரசித்தி பெற்ற உணவு வகைகளும் அதன் ஊட்டச்சத்து விவரங்களுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. 75 வகையான தோசையும் விற்பனை செய்யப்பட்டன.

நடைபயணம்

முன்னதாக உகந்த உணவு குறித்த 7½கிலோ மீட்டர் தூர விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி நடைபயணத்தை மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நடைபயணத்தில் உணவகங்ளில் பலகாரங்கள் பொட்டலம் இடும் போது அச்சடிக்கப்பட்ட தாள்களில் பொட்டலம் இடுவதை தவிர்த்து, வாழை இலைகள் உள்ளிட்ட சுகாதாரமான பொருட்களில் பொட்டலமிட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் செல்வக்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story