பறிமுதல் செய்த வாகனத்தை விற்றதால்பெண்ணுக்கு, ரூ.15 லட்சம் நிதி நிறுவனம் வழங்க வேண்டும்நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
ஓசூர்
ஓசூரில் வாகன கடன் பெற்ற வாடிக்கையாளரின் வாகனத்தை பறிமுதல் செய்து விற்ற தனியார் நிதி நிறுவனம், பெண்ணுக்கு ரூ.15 லட்சம் வட்டியுடன் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வாகன கடன்
ஓசூர் அருகேயுள்ள பெலத்தூரை சேர்ந்தவர் லட்சுமிதேவி. இவர் ஓசூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்் தேதி டிப்பர் லாரி வாங்குவதற்காக 4.20 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இதற்காக மாதம் தோறும் அவர் கடன் தவணை தொகையை செலுத்தி வந்துள்ளார். தவணை தவறிய தொகைக்கும் நிதி நிறுவனம் அவரிடம் கூடுதல் வட்டி வசூல் செய்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் வரை கடனுக்கான காலம் உள்ளது.
இந்த நிலையில், முறையான அறிவிப்பு கொடுக்காமல் சட்ட விதிகளை மீறி கடந்த ஜனவரி 28-ந் தேதி அந்த நிதி நிறுவனம் லட்சுமிதேவியின் டிப்பர் லாரியை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அவர் கிருஷ்ணகிரி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது நிதி நிறுவனம் பறிமுதல் செய்த டிப்பர் லாரியை வாடிக்கையாளருக்கு தகவல் தெரிவிக்காமல் விற்பனை செய்துள்ளது.
வழக்கு விசாரணை
இதனை அறிந்த லட்சுமிதேவி, தான் செலுத்த வேண்டிய பணத்தை நிதி நிறுவனத்திற்கு செலுத்த தயாராக இருப்பதாகவும், டிப்பர் லாரியை தனக்கு திரும்ப தர வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு செய்தார். ஆனால் அந்த நிதி நிறுவனம் டிப்பர் லாரியை ஏலத்தில் விற்று விட்டதாக, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராஜா மற்றும் உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர். அந்த தீர்ப்பில், நிதி நிறுவனம் நீதிமன்றத்தில் சரியான கணக்குகளை காட்டவில்லை. முறையான சட்ட நடைமுறைகளை கடைபிடித்து டிப்பர் லாரியை ஏலம் விடவில்லை. எனவே வழக்கு தொடர்ந்த வாடிக்கையாளருக்கு டிப்பர் லாரியின் கடனுக்காக இதுவரை கட்டிய 5 லட்சத்து 8,125 ரூபாயை நிதி நிறுவனம் உடனடியாக செலுத்த வேண்டும்.
நீதிபதிகள் உத்தரவு
மேலும் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் வாழ்வியல் நிதி இழப்புக்கு 5 லட்ச ரூபாயும், இவைகளுடன் கூடுதல் நிவாரணமாக 5 லட்சம் ரூபாயும், வழக்கு செலவுக்காக 10 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும் என கடந்த 7-ந்தேதி தீர்ப்பளித்தனர்.
மேலும் 2 மாதங்களில் நிதி நிறுவனம் அவருக்கு பணத்தை கொடுக்காவிட்டால் வழக்கு செலவிற்கான 10 ஆயிரம் ரூபாய் போக மீதமுள்ள 15 லட்சத்து 8,125 ரூபாய்க்கு 9 சதவீத வட்டியுடன் சேர்த்து பணத்தை வழங்க வேண்டும். அதுவும் வழக்குப்பதிவு செய்த கடந்த ஏப்ரல் 6-ந் தேதி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.