154 பயனாளிகளுக்கு ரூ.4½ கோடி வங்கி கடன் பெறுவதற்கான ஆணை


154 பயனாளிகளுக்கு ரூ.4½ கோடி வங்கி கடன் பெறுவதற்கான ஆணை
x

ராணிப்பேட்டையில் 154 பயனாளிகளுக்கு ரூ.4½ கோடி வங்கி கடன்பெறுவதற்கான ஆணையை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் 154 பயனாளிகளுக்கு ரூ.4½ கோடி வங்கி கடன்பெறுவதற்கான ஆணையை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

வங்கி கடன்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 9-ந் தேதி நடந்த வங்கியாளர் தொடர்பு முகாமில், வங்கி கடன் உதவிகள் வழங்குவதற்கு தேர்வு‌ செய்யப்பட்ட 176 பயனாளிகளில் 22 பேருக்கு ரூ.56 லட்சம் மதிப்பிலான வங்கிக் கடன் உதவி பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

மீதமுள்ள 154 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 60 லட்சம் மதிப்பிலான வங்கி கடன் உதவி பெறுவதற்கான ஆணைகள் வழங்கும் விழா கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, வங்கி கடன் உதவி பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

பணிநியமன ஆணை

தொடர்ந்து, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 2 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தொடக்க நிதி மானியமாக ரூ.10 லட்சம் பெறுவதற்கான ஆணைகளையும், வருவாய்த் துறையின் மூலம் முதியோர், மாற்றுத்திறனாளி மற்றும் விதவை என 10 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் சார்பில், ஆற்காடு ஒன்றியம் அனந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து நேரு பணியின்போது மரணமடைந்ததை தொடர்ந்து அவரது மனைவி துர்காவுக்கு கருணை அடிப்படையில் அரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சத்துணவு மையத்தில் சத்துணவு அமைப்பாளர் பணி நியமன ஆணையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன், முன்னோடி வங்கி மேலாளர் அலியம்மா ஆபிரஹாம், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் கங்காதரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஸ்ரீனிவாச சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story