1,590 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைக்கான ஆணை; சபாநாயகர் அப்பாவு வழங்கினார்


1,590 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைக்கான ஆணை; சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
x

நெல்லை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 2-வது கட்டமாக 1,590 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைக்கான ஆணையை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 2-வது கட்டமாக 1,590 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைக்கான ஆணையை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

புதுமைப்பெண் திட்டம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் நேற்று காலையில் 2-ம் கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து நெல்லையில் 2-வது கட்டமாக புதுமைப்பெண் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சரவணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

1,590 மாணவிகள்

சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். அவர், 2-வது கட்டமாக என்ஜினீயரிங் கல்லூரி மாணவிகள் 158 பேருக்கும், மருத்துவக்கல்லூரி மாணவிகள் 103 பேருக்கும், சட்டக்கல்லூரி மாணவிகள் 3 பேருக்கும், கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 1,195 பேருக்கும், தொழிற்கல்வி மாணவிகள் 61 பேருக்கும் என உள்பட மொத்தம் 1,590 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வங்கி பரிவர்த்தனை ஆணையை வழங்கினார்.

கல்வி உதவித்தொகை

தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி படிப்பதை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது.

அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. நிதி நெருக்கடி சீரான பின்னர் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவிகளுக்கும் உதவித்தொகை வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.

விரைவில் இழப்பீடு

டெல்டா மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களுக்கு கடந்த ஆட்சி காலத்தில் ஒரு ஹெக்டருக்கு ரூ.12 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் தற்ேபாது தி.மு.க. ஆட்சியில் ரூ.20 ஆயிரம் வழங்கப்ப்டுள்ளது.

இந்தியாவில் முதல்முதலாக விவசாயிகளுக்கு தி.மு.க. ஆட்சியில் தான் இலவச பம்பு செட் வழங்கப்பட்டது. ரூ.7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு இதுவரை 50 ஆயிரம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு இணைப்பு திட்டம் 90 சதவீதம் முடிவடைந்து உள்ளது. அடுத்த மாதம் இறுதிக்குள் இந்த திட்டப்பணிகள் முடிக்கப்படும். களக்காடு பகுதியில் சேதம் அடைந்த வாழைகளுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் தனலட்சுமி, கல்லூரி முதல்வர் உஷாகாட்வின், ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள், பேராசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story