நர்சுகளை பணி நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: ஒபிஎஸ் வலியுறுத்தல்


நர்சுகளை பணி நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: ஒபிஎஸ் வலியுறுத்தல்
x

கொரோனா தொற்று மேலாண்மைக்காகவே பணியமர்த்தப்பட்ட நர்சுகளை நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பழைய ஓய்வூதியம், அகவிலைப்படி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம், ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் என்று தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், 'புத்தாண்டு பரிசாக' கொரோனா காலத்தில் பணி புரிந்து கொண்டிருக்கின்ற 2,500 நர்சுகளை பணி நீக்கம் செய்து தி.மு.க. அரசு ஆணை பிறப்பித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது. இதன்மூலம் நர்சுகள் போராட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு வழிவகுத்துள்ளது.

செலவை குறைக்கிறேன் என்ற போர்வையில் சேவையை குறைக்கும் தி.மு.க. அரசின் மக்கள் விரோதச் செயலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற செயல்களை மேற்கொண்டு, அதன்மூலம் வருவாய்ப் பற்றாக்குறை குறைந்துவிட்டது, நிதிப் பற்றாக்குறை குறைந்துவிட்டது என்று வருகின்ற நிதிநிலை அறிக்கையில் பெருமை பேசிக் கொள்ள அரசு முயற்சிக்கிறது.

வருவாயைப் பெருக்கி அதன்மூலம் வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, கடன் ஆகியவற்றை குறைக்க நடவடிக்கை எடுப்பதுதான் சிறப்பான பொருளாதாரக் கொள்கை. அதைவிட்டுவிட்டு மக்களின் வயிற்றில் அடித்து வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, கடன் ஆகியவற்றை குறைப்பது என்பது தவறான பொருளாதாரக் கொள்கை.

இந்தத் தவறான பொருளாதாரக் கொள்கையை தி.மு.க. அரசு கைவிட வேண்டும். கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், கொரோனா தொற்று மேலாண்மைக்காகவே பணியமர்த்தப்பட்ட நர்சுகளை நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.மக்களை வாழ வைக்கத்தான் மக்களாட்சியே தவிர, மக்களை துன்புறுத்துவதற்கு அல்ல என்பதை மனதில் நிலைநிறுத்தி அதற்கேற்ப ஆட்சியை தி.மு.க. அரசு நடத்த வேண்டும். இல்லையெனில், துன்பத்தினால் மக்கள் விடும் கண்ணீர் தி.மு.க. குடும்ப ஆட்சியை விரைவில் வீழ்த்திவிடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story