மக்கள் நீதிமன்றத்தில் ரூ.28 கோடியே 71 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு


மக்கள் நீதிமன்றத்தில் ரூ.28 கோடியே 71 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
x

வேலூர் மாவட்டத்தில் 11 கோர்ட்டுகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,055 வழக்குகளில் ரூ.28 கோடியே 71 லட்சத்து 61 ஆயிரத்து 445 இழப்பீடு தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 11 கோர்ட்டுகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,055 வழக்குகளில் ரூ.28 கோடியே 71 லட்சத்து 61 ஆயிரத்து 445 இழப்பீடு தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்கள் நீதிமன்றம்

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான வசந்தலீலா தலைமை தாங்கினார்.

இதில், திருப்பத்தூர் மாவட்டம் பாய்ச்சல் கிராமத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ரெயில்வே மேம்பாலம் அமைக்க சுமார் 40 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கு அரசு சார்பில் போதுமான இழப்பீடு வழங்கப்படவில்லை என்று நில உரிமையாளர்கள் 82 பேர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வக்கீல்கள் உதயகுமார், பாலாஜி, வெண்ணிலா, அஸ்வினி ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த வழக்கில் நேற்று தீர்வு காணப்பட்டு நில உரிமையாளர்களுக்கு ரூ.9 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

இதேபோன்று வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த தொழிலாளி ரமேஷ் (வயது 30) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காகிதப்பட்டறையில் நடந்த வாகன விபத்தில் பலியானார். அவருடைய மனைவி ஜமுனா இழப்பீடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தீர்வு காணப்பட்டு இழப்பீடாக ரூ.13 லட்சத்திற்கான காசோலையை ரமேஷ் மனைவி ஜமுனாவிடம் முதன்மை அமர்வு நீதிபதி வசந்தலீலா வழங்கினார்.

ரூ.28 கோடியே 71 லட்சம் இழப்பீடு

அதைத்தொடர்ந்து நடந்த மக்கள் நீதிமன்றத்தில் வாகன விபத்து, வங்கி வராக்கடன், நிலமோசடி, தொழிலாளர் வழக்கு, குடும்பநல வழக்கு, காசோலை மோசடி உள்பட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 11 கோர்ட்டுகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 8,305 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

அவற்றில் 2,055 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. அதன்மூலம் ரூ.28 கோடியே 71 லட்சத்து 61 ஆயிரத்து 445 இழப்பீடாக சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை வேலூர் மாவட்ட மற்றும் தாலுகா சட்டப்பணிகள் ஆணைக்குழு செய்திருந்தது.


Next Story