54 பேருக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்யும் ஆணை
வேலூரில் 54 பேருக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்யும் ஆணை வழங்கப்பட்டது.
வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் குழந்தை பிறந்து மற்றும் ஒருவர் இறந்து ஓராண்டிற்கு பின்னர் சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு அதனை பதிவு செய்யும் ஆணை வழங்கும் சிறப்பு முகாம் வேலூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. தாசில்தார் செந்தில் முன்னிலை வகித்தார்.
முகாமிற்கு வேலூர் உதவி கலெக்டர் கவிதா தலைமை தாங்கி சான்றிதழ் பெற விண்ணப்பித்தவர்கள் மற்றும் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் பிறப்பு, இறப்பு தொடர்பான விவரங்களை கேட்டறிந்து உறுதி செய்தார். பின்னர் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்யும் ஆணை வழங்கினார். சிறப்பு முகாமில் 65 பேர் கலந்து கொண்டனர். அதில் 54 பேருக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்யும் ஆணை வழங்கப்பட்டது. இதனை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், மாநகராட்சி, பேரூராட்சி சுகாதார அலுவலரிடம் வழங்கி பதிவு செய்து சான்றிதழ் பெற்று கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் தலைமையிடத்து துணை தாசில்தார் சுகுமார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.