நீரோடையில் ஆக்கிமிரப்புகளை அகற்ற உத்தரவு
பந்தலூர் காலனியில் உள்ள நீரோடையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தாசில்தார் உத்தரவிட்டார்.
பந்தலூர்,
பந்தலூர் காலனியில் உள்ள நீரோடையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தாசில்தார் உத்தரவிட்டார்.
வெள்ளம் புகுந்தது
பந்தலூரில் தாசில்தார் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் வழியாக காலனி பகுதிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையின் குறுக்கே நீரோடை செல்கிறது. இதனால் அங்கு சிறிய பாலம் கட்டப்பட்டு உள்ளது. நீரோடை, அதையொட்டி உள்ள இடம் வருவாய்த்துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலமாகும். அந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாக தெரிகிறது. இதனால் அகலமாக இருந்த நீரோடையின் பரப்பளவு குறுகியது. இதனால் மழை காலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் பாலத்தையொட்டி வெள்ளம் தேங்கி நிற்பதோடு, அருகே உள்ள வீடுகளுக்குள் புகும் நிலை இருந்தது. சாலையிலும் வெள்ளம் தேங்கியதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
இதையடுத்து நீரோடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பெரிய பாலம் அமைக்க வேண்டும், சிறுபாலத்தையொட்டி உள்ள நடைபாதையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அம்ரித்திடம் மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் படி, கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதுரதுல்லா, பந்தலூர் தாசில்தார் நடேசன், வருவாய் ஆய்வாளர் லட்சுமி சங்கர் ஆகியோர் நீரோடையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் அங்கு நில அளவை செய்யப்பட்டது. இதையடுத்து தாசில்தார் நடேசன் தலைமையில் பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது பந்தலூர் காலனி பகுதியில் நீரோடை மற்றும் நடைபாதையை ஒட்டி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தாசில்தார் உத்தரவிட்டார். இல்லையென்றால் வருவாய்த்துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.