திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
தினத்தந்தி செய்தி எதிரொலியாக திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
தினத்தந்தி செய்தி எதிரொலியாக திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கிரிவலம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் 14 கிலோமீட்டர் தூரம் மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். இங்குள்ள கிரிவலப்பாதையில் ஏராளமான சாதுக்கள் தங்கி உள்ளனர்.
மேலும் சிலர் நடைபாதையை பல்வேறு சொந்த பயன்பாட்டுக்காக ஆக்கிரமித்துள்ளனர். இதனால் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு இடையூறு உள்ளதாக புகார் இருந்தது.
இதுகுறித்த விரிவான செய்தி தினத்தந்தியில் இன்று வெளியானது.
இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் முருகேஷ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
ஒவ்வொரு மாத பவுர்ணமி, சித்ரா பவுர்ணமி மற்றும் தீபத்திருவிழா போன்ற நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.
திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டு வருகிறது.
மக்களுக்கு இடையூறு
இந்தநிலையில், கிரிவலப்பாதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தற்காலிக கொட்டகைகள், நடைபாதையில் கடைகள், நடைபாதை முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்து பக்தர்கள் பயன்படுத்த இயலாத நிலையினை ஏற்படுத்தி உள்ளனர்.
மேலும், கடைகளுக்கு முன்பாக இருக்கைகள் போடுதல், நடைபாதையினை நிரந்தர வாகனம் நிறுத்துமிடமாக பயன்படுத்தல் போன்ற நிகழ்வுகள் தற்போது அதிகரித்து வருகிறது. எனவே ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து நாளை (வெள்ளிக்கிழமை) ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற தவறினால், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, நெடுஞ்சாலை துறை, காவல் துறை உள்ளிட்ட அரசு துறைகள் இணைந்து எவ்வித முன்னறவிப்பும் இன்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
மேலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின்னர் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது காவல்துறை வாயிலாக வழக்குப்பதிவு செய்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.