ஏரி கரைகளை பலப்படுத்தி நடைபயிற்சி தளமாக மாற்ற உத்தரவு
ஏரி கரைகளை பலப்படுத்தி நடைபயிற்சி தளமாக மாற்ற கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூர் புறநகர் துறைமங்கலத்தில் உள்ள பெரிய ஏரியில் சீமை கருவேல மரங்களை அகற்றி, கரைகளை பலப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் கற்பகம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் 73 ஏரிகளும், 33 அணைக்கட்டுகளும் மற்றும் 5 ஆறுகளும் உள்ளன. மருதையாறு வடிநில உபகோட்டம் (பெரம்பலூர்) கட்டுப்பாட்டில் துறைமங்கலத்தில் உள்ள பெரிய ஏரி 120 ஏக்கர் ஆயக்கட்டு பரப்பளவும், 17.22 மில்லியன் கன அடி நீர் தேக்கும் அளவும் கொண்டது. இதன்மூலம் 273 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. துறைமங்கலம் பெரிய ஏரியில் உள்ள சீமைக்கருவேல மரங்கள், முட்புதர்கள் ஆகியவற்றை அகற்றி, சுற்றியுள்ள கரை பகுதிகளை பலப்படுத்த வேண்டும் என்று நீர்வளத்துறை அலுவலர்களுக்கும், ஏரியினை சுற்றி சாலை அமைத்து, பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வகையில் இருபுறமும் மின் விளக்குகள் அமைத்து நடைபாதையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள நகராட்சி ஆணையருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார். ஆய்வின்போது, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராதா, பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ் மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.