தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகள் நடமாட்டத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வுக் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், கோர்ட்டு அலுவல்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
ரவுடிகள் நடமாட்டத்தை...
அப்போது போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், மாவட்டத்தில் புகையிலை விற்பனையை தடுக்க வேண்டும். கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க போலீசார் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். ரவுடிகள் நடமாட்டத்தை அடியோடு ஒடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்' என கேட்டுக் கொண்டார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், இளங்கோவன், தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், அரசு வக்கீல்கள் கலந்து கொண்டனர்