படித்தவர்களை ஈர்த்து வரும் இயற்கை விவசாயம்


படித்தவர்களை ஈர்த்து வரும் இயற்கை விவசாயம்
x

படித்தவர்களை இயற்கை விவசாயம் ஈர்த்து வருகிறது.

திண்டுக்கல்

விளைச்சலை அதிகரிக்க தற்போது அதிக அளவில் ரசாயன உரங்களை பயன்படுத்தும் கட்டாயப் மனப்போக்கு விவசாயிகளிடம் வளர்ந்து வருகிறது. அதுபோல் முழு விளைச்சல் அடையும் முன்பே காய்களை பறித்து ரசாயனம் மூலம் பழுக்க வைக்கும் ஆபத்தான மனப்போக்கு வியாபாரிகளிடம் அதிகரித்து வருகிறது.

இதனால் எங்கும் ரசாயனம் எதிலும் ரசாயனம் என்ற நிலை உருவாகி, நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக கொல்லும் நஞ்சாக மாறி வருகின்றன.

இயற்கையோடு மனிதர்கள் இணைந்து வாழ்ந்தபோது ஆபத்துகள் பெரிதாய் வந்தது இல்லை. அவர்கள் செயற்கையோடு கைகோர்த்தப் பிறகு ஆபத்துகளுக்கு பஞ்சமே இல்லை.

இப்போது மக்கள் இதை உணரத் தொடங்கி விட்டார்கள். படித்தவர்கள் மத்தியில் இதில் ஓர் எழுச்சியும் ஏற்பட்டு வருகிறது. அவர்களில் பலர் குழுக்களாக செயல்பட்டு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பதை அறிகிறபோது மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்களின் கருத்துக்களை பார்ப்போம்.

கடன் பெற்று நிலம் வாங்கி விவசாயம்

திண்டுக்கல் மேற்கு தாலுகா முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாரதி:- நான் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வேலையில் சேர்ந்தேன். அதேநேரம் மனதில் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் எனக்கு சொந்த நிலம் இல்லை. இதனால் கடன் பெற்று நிலம் வாங்கினேன். அதில் வாழை, காய்கறிகள், மக்காச்சோளம் என அனைத்து பயிர்களையும் இயற்கை விவசாய முறையில் மேற்கொண்டேன். இதற்கிடையே விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் இயற்கை விவசாயிகளை கண்டறிந்து திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய 3 இடங்களில் சந்தை தொடங்கி இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களை விற்க தொடங்கினோம்.

ஒரு நாளைக்கு ஒரு லட்ச ரூபாய் வரை விற்பனை ஆனது. கொரோனா காலத்தில் விற்பனை பாதித்தது. தற்போது திண்டுக்கல்லில் மீண்டும் சந்தை தொடங்கி இருக்கிறோம். பழனி, ஒட்டன்சத்திரத்தில் மீண்டும் சந்தை தொடங்க இருக்கிறோம். அதேபோல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயற்கை விவசாய காய்கறிகளை விற்க சந்தை அமைக்க அனுமதிகேட்க இருக்கிறோம். ரசாயனம் இல்லாமல் விவசாயம் மேற்கொள்வதே லாபம் தான். மண்வளம், மனித நலம் பேணுவதற்கு அனைவரும் இயற்கை விவசாயத்துக்கு திரும்ப வேண்டும். நான் 5 அடுக்கு சாகுபடி முறை, பல பயிர்கள் சாகுபடி முறையை கையாள்கிறேன். இதனால் தமிழகம் மட்டுமின்றி இலங்கை வேளாண் கல்லூரி மாணவர்களும் நேரில் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

பாரம்பரிய நெல் ரகம்

பழைய ஆயக்குடியை சேர்ந்த ஆசிரியை கவிதா:- நான் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்தேன். அப்போது உணவு, காய்கறிகள் நஞ்சாக மாறியதால் உடல்நலம் பாதிக்கப்படுவதை அறிந்து மனதுக்கு வேதனையாக இருந்தது. எனவே இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் விவசாயத்தை பற்றி எதுவுமே தெரியாது. எனவே இயற்கை விவசாயம் தொடர்பாக பயிற்சி பெற்று கணவர் பாரதியுடன் சேர்ந்து விவசாயத்தில் இறங்கினேன். பாரம்பரிய நெல் ரகங்களை மட்டுமே பயிரிடுகிறோம். ஒரு துளி கூட ரசாயனம் கலக்காமல் விவசாயம் செய்வதால் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது.

மக்களுக்கு நஞ்சில்லாத நெல்லை கொடுத்த திருப்தி ஏற்படுகிறது. ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் விளைபொருட்கள் நஞ்சாக மாறுவதோடு, பல உயிர்கள் அழிந்து வருகின்றன. இதுவும் பருவநிலை மாற்றத்துக்கு ஒரு காரணம் ஆகும். மண் வளம், சுற்றுச்சூழல், பாரம்பரியத்தை காப்பதற்கு இயற்கை விவசாயத்துக்கு அனைவரும் திரும்ப வேண்டும். இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களை மக்கள் தேர்வு செய்து வாங்க வேண்டும். இதற்கான நெல் அறுவடை திருவிழா நடத்தி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். வேளாண்மை அதிகாரிகள் வந்து பேசினர். எனினும் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்கு பலர் தயங்குகின்றனர். எனவே பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் பயிற்சி அளித்து வருகிறோம்.

கண்களை விற்று ஓவியம் வாங்குவது

வெளிநாட்டில் இருந்து வந்து விவசாயம் செய்யும் சித்தையன்கோட்டையை சேர்ந்த காதர் மீரான்:- நான் கத்தாரில் பெட்ரோலிய நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை செய்தேன். எனது தந்தை விவசாயம் செய்து வந்தார். எனவே வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு நானும் விவசாயத்தில் இறங்கினேன். அதேநேரம் எனது தந்தை இயற்கை விவசாயம், பாரம்பரியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அடிக்கடி கூறியது நினைவுக்கு வந்தது. இதனால் இயற்கை விவசாயத்தில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறேன். அதில் தொடக்கத்தில் சிறிய சறுக்கல் ஏற்பட்டது. விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இயற்கை விவசாயிகள் சேர்ந்து சந்தைகளை உருவாக்கி விளைபொருட்களை விற்க தொடங்கினோம். மேலும் நான் விளைவிக்கும் பொருட்களில் 40 சதவீதத்தை நானே விற்றுவிடுவதால் எனக்கு லாபம் கிடைத்து வருகிறது. ரசாயன உரம், பூச்சிக்கொல்லியை பயன்படுத்தி விவசாயம் செய்வதால் மண் வளம், பல்லுயிர் பெருக்கம், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கிறது. கண்களை விற்று ஓவியம் வாங்கும் கதையாக மாறி வருகிறது. இலங்கையில் ரசாயன முறை விவசாயத்தின் விளைவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதை யாரும் மறக்க கூடாது. எனவே இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

மக்கள் வாங்க வேண்டும்

பலக்கனூத்து அரசு கால்நடை மருத்துவர் தங்கவேல்:- நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் விவசாயம் முழுவதும் எனக்கு தெரியும். கல்லூரியில் சேரும்போது கூட பி.எஸ்சி. விவசாய படிப்பில் சேர விரும்பினேன். அது கிடைக்காததால் கால்நடை மருத்துவம் படித்து வேலையில் சேர்ந்தேன். இதற்கிடையே ரசாயனத்தால் உணவு பொருட்கள் நஞ்சாக மாறுவது வேதனை அளித்தது. அதை மாற்றுவதற்கு எனது பங்காக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

எனவே இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். இயற்கை விவசாயத்தில் செலவு மிகவும் குறைவாகவே ஆகிறது. அதை பல விவசாயிகள் புரிந்து கொள்வதே இல்லை. அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும் எனும் நோக்கில் மண் வளத்தை நாசமாக்கி வருகின்றனர். ரசாயனம் உரம், பூச்சிக்கொல்லியை பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவு பொருட்களால் உடல்நலம் பாதிக்கப்படும். இயற்கை முறையில் விளைந்த உணவு பொருட்களை மக்கள் வாங்கினால், விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு திரும்புவார்கள்.

மதிப்புக்கூட்டி விற்றால் வருவாய்

திண்டுக்கல்லை சேர்ந்த விஜயலட்சுமி:- கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மல்லனம்பட்டியில் உள்ள எங்களுடைய தோட்டத்தில் இருந்த தென்னை மரங்கள் கருக தொடங்கின. அருகில் உள்ள நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறிக் கொண்டே இருந்தன. எனவே தென்னை மரங்களை காப்பாற்றாவிட்டால் நிலம் பாழாகி விடுமே? என்று நினைத்தேன். இதனால் இயற்கை விவசாயத்தின் மூலம் தென்னை மரங்களை மீட்கும் முயற்சியில் இறங்கினேன். அதற்கு நல்ல பலன்கிடைத்தது.

தென்னை மரங்களுடன் மிளகாய், சிறுதானியங்கள், எண்ணெய் பயிர்கள், காய்கறிகளை ஊடுபயிராக இயற்கை முறையில் சாகுபடி செய்தேன். ஆனால் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்க முடிவு செய்தேன். அதன்படி தேங்காய், நிலக்கடலை, எள் ஆகியவற்றை அறுவடை செய்து அப்படியே விற்காமல் செக்கிலிட்டு எண்ணெயை ஆக மாற்றி விற்கிறேன். அதேபோல் சிறுதானியங்களில் சத்துமாவும், தக்காளியில் ஜாம், ஊறுகாய் தயாரித்து விற்கிறேன். அதேபோல் ஆடுகள், மாடுகள், கோழிகள் என ஒருங்கிணைந்த விவசாயம் மேற்கொள்வதால் நல்ல வருவாய் கிடைக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story