படித்தவர்களை ஈர்த்து வரும் இயற்கை விவசாயம்; இயற்கை ஆர்வலர்கள் கருத்து
படித்தவர்களை இயற்கை விவசாயம் ஈர்த்து வருவது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விளைச்சலை அதிகரிக்க தற்போது அதிக அளவில் ரசாயன உரங்களை பயன்படுத்தும் கட்டாய மனப்போக்கு விவசாயிகளிடம் வளர்ந்து வருகிறது. அதுபோல் முழு விளைச்சல் அடையும் முன்பே காய்களை பறித்து ரசாயனம் மூலம் பழுக்க வைக்கும் ஆபத்தான மனப்போக்கு வியாபாரிகளிடம் அதிகரித்து வருகிறது. இதனால் எங்கும் ரசாயனம் எதிலும் ரசாயனம் என்ற நிலை உருவாகி, நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக கொல்லும் நஞ்சாக மாறி வருகின்றன.
இயற்கையோடு மனிதர்கள் இணைந்து வாழ்ந்தபோது ஆபத்துகள் பெரிதாய் வந்தது இல்லை. அவர்கள் செயற்கையோடு கைகோர்த்தப் பிறகு ஆபத்துகளுக்கு பஞ்சமே இல்லை. இப்போது மக்கள் இதை உணரத்தொடங்கி விட்டார்கள். படித்தவர்கள் மத்தியில் இதில் ஓர் எழுச்சியும் ஏற்பட்டு வருகிறது. அவர்களில் பலர் குழுக்களாக செயல்பட்டு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பதை அறிகிறபோது மகிழ்ச்சியாகவே இருக்கிறது.
இதுகுறித்து இயற்கை ஆர்வலர்களின் கருத்துகளை பார்ப்போம்.
மனநிறைவு ஏற்படுகிறது
என்ஜினீயரிங் படித்துவிட்டு இயற்கை விவசாயம் செய்து வரும் உத்தமபாளையத்தை சேர்ந்த பெரோஸ்கான் கூறும்போது, "நான் என்ஜினீயரிங் படித்துவிட்டு, ஆராய்ச்சி படிப்பு படிக்க விரும்பினேன். இருந்தாலும் இயற்கை விவசாயம் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதற்கு முன்பு விவசாயம் செய்த எந்த அனுபவமும் கிடையாது. உத்தமபாளையத்தில் எனது பெற்றோர் வாங்கிய இடத்தில் கடந்த 2 ஆண்டாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வீடியோக்களை பார்த்து தான் இயற்கை விவசாயம் மீதான ஆர்வம் அதிகரித்தது. அவருடைய வழிகாட்டுதலில் செயல்பட்டு வரும் வானகம் பண்ணைக்கு சென்று பயிற்சி பெற்றேன். சிறுதானியங்கள், சிவப்பு சோளம், செவ்வாழை போன்றவற்றை சாகுபடி செய்தேன். தற்போது அடுத்த சாகுபடிக்கு தயாராகி வருகிறேன். ரசாயன உரம் எதுவும் பயன்படுத்துவது கிடையாது. முழுவதும் இயற்கை முறையில் விவசாயம் செய்வதால் மனநிறைவு ஏற்படுகிறது. பயிர் சாகுபடியில் ஏற்படும் சந்தேகங்களை இயற்கை விவசாயம் செய்து வரும் நண்பர்களிடம் கேட்டு தெளிவு பெறுகிறேன்" என்றார்.
தற்சார்பு பொருளாதாரம்
பூசானம்பட்டியில் இயற்கை விவசாயம் செய்து வரும் பிரவீன்குமார் கூறும்போது, "நான் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். வேலை, வேலை என்று ஓடிக்கொண்டு இருந்தபோது, இயற்கை விவசாயம், தற்சார்பு பொருளாதாரம் மீதான ஆர்வம் அதிகரித்தது. ஏற்கனவே ஊரில் எனது குடும்பத்தினர் விவசாயம் செய்து வருவதால், வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்துவிட்டேன். தற்போது விவசாயம் செய்து வருகிறேன். அடுத்ததாக வீட்டுத்தோட்டம் அமைக்க இருக்கிறேன். தங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்து கொள்வதும் தற்சார்பு பொருளாதாரம் தான். இன்றைக்கு எல்லாம் வணிகமயமாகி வருகிறது. ஆனால், விவசாயம் என்பது வாழ்வியலுக்கானது. படித்தவர்கள் விவசாயம் செய்ய முன்வருவது ஆரோக்கியமான மாற்றம். விவசாயம் செய்வது பழமைவாதம் என்ற போக்கு மாற வேண்டும். இயற்கை முறையில் விவசாயம் செய்தால் அதிக விளைச்சல் வராது என்ற ஒரு பார்வை இருக்கிறது. அது தவறானது. இயற்கை முறையில் விவசாயம் செய்யும் போது சாகுபடி செலவு குறையும். அதிக விளைச்சலை பெற முடியும். முதலில் சந்தைப்படுத்த சில சிரமங்கள் ஏற்படும். பிறகு சந்தைப்படுத்துதல் எளிதாகி விடும்" என்றார்.
உள்ளூரிலேயே வாடிக்கையாளர்கள்
இயற்கை விவசாயம் செய்வதோடு, விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் மற்றும் இடுபொருட்கள் தயாரிப்பு தொடர்பாக பயிற்சி அளித்து வரும் உத்தமபாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் கூறும்போது, "நான் சட்டப்படிப்பு படித்துள்ளேன். விவசாயம் மீதான ஆர்வத்தால் இயற்கையான முறையில் விவசாயம் செய்து வருகிறேன். நம்மாழ்வாரின் வானகம் பண்ணையில் முறையாக பயிற்சி பெற்றேன். விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் தொடர்பாக பயிற்சி அளித்து வருகிறேன். பயிற்சி பெறும் நிறையபேர் அதனை தொடர்ந்து பின்பற்றுகிறார்கள். இயற்கை விவசாயம் செய்வதற்கு மண் வளமாக இருந்தாலே போதுமானது. ரசாயன உரங்கள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்ட மண்ணின் வளத்தை 6 மாதத்தில் இயல்பாக மாற்றி விடலாம். மண் வளமாக இருந்தால் எந்த பயிர் சாகுபடி செய்தாலும் நன்கு விளைச்சல் அடையும். இயற்கையான இடுபொருட்களான மூலிகை பூச்சிவிரட்டி, அமிர்த கரைசல், மீன் அமிலம், பஞ்சகவ்யம், பழ கரைசல் போன்றவை தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கிறேன். இவை, இயற்கை விவசாயத்துக்கு மிகவும் உதவும்.
இன்றைய மக்களிடம் நஞ்சில்லா உணவு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட காய்கறிகள், பழங்களை விரும்பி வாங்குகின்றனர். எனவே, சந்தைப்படுத்துவது எளிதானது தான். காய்கறி சாகுபடி செய்யும் போது, ஒரே காய்கறியை சாகுபடி செய்யாமல், பலவிதமான காய்கறிகளை சாகுபடி செய்ய வேண்டும். மக்கள் வாரந்தோறும் சந்தைக்கு சென்று குறைந்தது 10 வகையான காய்கறிகளை வாங்குகின்றனர். 10 வகையான காய்கறிகளை சாகுபடி செய்யும் போது, அவற்றை சந்தைக்கு கொண்டு செல்வதை விட, மக்களை தேடிச் சென்று 10 வகையான காய்கறியையும் நேரடியாக விற்பனை செய்யலாம். இதன் மூலம் வழக்கமான வாடிக்கையாளர்கள் உள்ளூரிலேயே கிடைத்து விடுவார்கள். வாடிக்கையாளருக்கும், விவசாயிகளுக்கும் இடையே நேரடி தொடர்பு இருப்பதால், விவசாயி நஷ்டம் அடையப்போவது இல்லை. அதுபோல், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்யும் போது வருவாய் மேலும் அதிகரிக்கும்" என்றார்.
உயர்ந்த தொழில்
அணைப்பட்டியில் இயற்கை விவசாயம் செய்து வரும் தமிழன் கூறும்போது, "நான் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தேன். அந்த பணியை ராஜினாமா செய்து விட்டு கடந்த 2 ஆண்டாக விவசாயம் பார்த்து வருகிறேன். சொந்த ஊரில் விவசாயம் செய்வது மகிழ்ச்சியை கொடுக்கிறது. காய்கறிகளுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போது தான் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாது. விளை பொருட்களை சந்தைப்படுத்துவதில் இடைத்தரகர்கள் பிரச்சினை இருக்கிறது. அதனை தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் நேரடி தொடர்பு இருந்தால் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். மக்களுக்கும் குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும். மற்ற தொழில்களை விடவும் விவசாயம் உயர்ந்த தொழில் என்பதை வரும் காலம் உணர்த்தும்" என்றார்.
உயிரோட்டம்
கம்பத்தில் இயற்கை விவசாயம் செய்து வரும் ஹரிகரன் கூறும்போது, "நான் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு 5 நட்சத்திர ஓட்டல்களில் வேலை பார்த்து வந்தேன். இயற்கை விவசாயம் மீதான ஆர்வத்தில் பணியை விட்டுவிட்டு, சொந்த ஊருக்கு வந்தேன். இங்கு நான் மனநிறைவோடு விவசாயம் செய்து வருகிறேன். நிலத்தையும், நீரையும் பாதுகாக்க நாம் செயற்கை முறை விவசாயத்தை குறைத்து இயற்கை விவசாயத்தை கொண்டுவர வேண்டும். அதை மறுபடி கொண்டு வந்தால்தான் விளைச்சல் அதிகமாகும். பூமியை மீண்டும் உயிரோட்டம் உடையதாக மாற்ற முடியும். அது இயற்கை விவசாயத்தால் தான் முடியும்" என்றார்.