இயற்கை வேளாண்மை இடுபொருட்கள் உற்பத்தி அலகுகள் அமைக்க மானியம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
இயற்கை வேளாண்மை இடுபொருட்கள் உற்பத்தி அலகுகள் அமைக்க மானியம் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
இயற்கை வேளாண்மை இடுபொருட்கள் உற்பத்தி அலகுகள் அமைக்க மானியம் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
மானியம்
இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் 2022-2023-ம் ஆண்டில் இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் மண்புழு உரம், பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம், அமிர்தகரைசல், மீனமிலம் போன்ற இயற்கை வேளாண் இடுபொருட்களின் உற்பத்தி அலகுகளை நிறுவ மானியம் வழங்கப்பட உள்ளது. இயற்கை விவசாய ஆர்வலர் குழு, இயற்கை விவசாய மகளிர் குழு, உழவர் உற்பத்தியாளர் குழு, பாரம்பரிய வேளாண் வளர்ச்சித்திட்ட விவசாயிகள் குழுக்களுக்கு மானிய உதவியாக அலகு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வீதம் 3 அலகுகளுக்கு ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படவுள்ளது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறு, குறு, பெண் விவசாயிகள் அடங்கிய குழுக்கள் மற்றும் நடப்பாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல் படுத்திடும் கிராம பஞ்சாயத்துகளை சார்ந்த விவசாயிகள் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குழுவினர் தங்களது இயற்கை வேளாண் இடுபொருட்களின் உற்பத்தி அலகினை ஒரு செயல் விளக்க அலகாக பராமரிக்க அனுமதிக்க வேண்டும்.
உறுதிமொழி பத்திரம்
இதுதொடர்பான உறுதிமொழி பத்திரம் பயனாளிகளிடம் பெற்று கொள்ளப்படும். தேர்வு செய்யப்பட்டபின் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழுக்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு உற்பத்தியை தொடர வேண்டும். மானியம் பெறும் குழு திட்ட கூறுகளை செயல்படுத்தும் போதும், செயல்படுத்திய பின்பும் புகைப்பட ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
திட்டத்தில் பயன்பெற விரும்பும் குழுக்கள் முழு முகவரியுடன் குழுவின் பெயர், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, குழுவின் வங்கிகணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் விரிவான திட்ட அறிக்கையினை வருகிற 21-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, விருப்பமுள்ள குழுக்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.