கூண்டில் சிக்கிய குரங்குகளை மீட்க பாச போராட்டம் நடத்திய மற்ற குரங்குகள்
திருவண்ணாமலையில் கூண்டில் சிக்கிய குரங்குகளை மீட்க பாச போராட்டம் நடத்திய மற்ற குரங்குகளால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை வேங்கிக்கால் அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து ஏராளமான குரங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து அட்டூழியம் செய்து வந்தன. இந்த குரங்குகள் சில சமயங்களில் வீடுகளில் புகுந்து அங்குள்ள தின்பண்டங்களை தூக்கி சென்று விடுகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட சிலர் அந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்தனர்.
இதில் 20-க்கும் மேற்பட்ட குரங்குகள் சிக்கி கொண்டன. அந்த குரங்குகள் கூட்டத்தில் இருந்த 2 பெரிய குரங்குகள் மட்டும் கூண்டில் சிக்காமல் தப்பித்து உள்ளது. கூண்டில் சிக்கிய குரங்குகளை பார்த்து அவை சத்தம் போட்டு கொண்டே இருந்தது. மேலும் அவற்றை எவ்வாறு மீட்பது என்று அறியாமல் அந்த 2 குரங்குகளும் அருகில் உள்ள மரத்தில் ஏறி குதித்து பாச போராட்டமே நடத்தியது.
இருப்பினும் கூண்டு வைத்து பிடித்த நபர்கள் அந்த குரங்குகளை கூண்டோடு சரக்கு வாகனத்தில் ஏற்றி வேறு இடத்தில் விடுவதற்காக கொண்டு சென்றனர். ஆனால் தனியாக இருந்த அந்த 2 குரங்குகளும் வேதனை தங்க முடியாமல் அங்கும், இங்கும் சத்தம் போட்டபடி ஓடி கொண்டே இருந்தது. இதனை கண்ட பெண்கள் சிலர் வேதனை அடைந்தனர்.