தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் சிக்கினர்


தினத்தந்தி 9 Jun 2023 12:15 AM IST (Updated: 9 Jun 2023 7:10 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து பத்து பவுன் நகைகள், செல்போன்கள், மோட்டார் சைக்கிள்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்

தூத்துக்குடி

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இளஞ்சிறார் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 பவுன் நகை, செல்போன்கள் மீட்கப்பட்டன.

வழிப்பறி

தூத்துக்குடி தாளமுத்துநகர் சவேரியார்புரத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் அஜித்குமார் (வயது 28). இவர் கடந்த 6-ந் தேதி காலையில் ஒரு வங்கி அருகே நின்று கொண்டு இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் ஆஜித்குமாரை அரிவாளால் வெட்டி, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.8 ஆயிரத்து 500 ரொக்கப்பணத்தை பறித்து சென்று விட்டனர்.

இதேபோன்று தூத்துக்குடி 4-வது கேட் அருகே நின்று கொண்டு இருந்த ஏரல் சேதுக்குவாய்த்தான் பகுதியை சேர்ந்த காஜாமுகைதீன் மகன் ஹிதயத்துல்லா (51) என்பவரை நபர்கள் கத்தியால் குத்தி செல்போன் மற்றும் ரூ.4 ஆயிரத்தை பறித்து சென்றனர்.

போலீசார் விசாரணை

குறுக்குச்சாலையில் நின்று கொண்டு இருந்த ஓட்டப்பிடாரம் வ.உ.சி. தெருவை சேர்ந்த வீரப்பன் மகன் கிருஷ்ணசாமி (72) என்பவரை தாக்கி 2½ பவுன் எடையுள்ள 2 தங்க மோதிரங்களையும், அந்த வழியாக வந்த ஓட்டப்பிடாரம் கோட்டை தெருவை சேர்ந்த சுடலைமுத்து மகன் மாடசாமி (60) என்பவரிடம் 7½ பவுன் தங்க மோதிரம், கைச்சங்கிலி, தங்கசங்கிலி ஆகியவற்றையும் பறித்துச்சென்று உள்ளனர்.

இது தொடர்பாக தாளமுத்துநகர், சிப்காட், ஓட்டப்பிடாரம் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கேமரா காட்சிகள் ஆய்வு

இந்த தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்களை பிடிப்பதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சம்பத் (தூத்துக்குடி), லோகேசுவரன் (மணியாச்சி), இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன் (தாளமுத்துநகர்), முத்துராமன் (ஓட்டப்பிடாரம்), தர்மர் (புளியம்பட்டி) ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இத்தனிப்படையினர் வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடினர். சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

6 பேர் சிக்கினர்

அப்போது, வழிப்பறி சம்பவங்களில் தூத்துக்குடி கோவில்பிள்ளை விளையை சேர்ந்த செல்வபாரதி மகன் மகாராஜா, தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்த ஜெபமாலை மகன் ஜவகர் (வயது 44), தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்த அந்தோணி மகன் மோகித், புளியம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த ஏசுதாசன் மகன் ரோஷன் (20), தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் செல்வகுமார் மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய 6 பேரும் சேர்ந்து ஈடுபட்டது தெரியவந்தது.

இவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டுவிட்டு புளியம்பட்டியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே தனிப்படை போலீசார் விரைந்து சென்று 6 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். முன்னதாக போலீசாரிடம் பிடிபடாமல் தப்பி ஓடமுயன்றதில் கீழே விழுந்த மோகித், செல்வக்குமார் ஆகிய 2 பேருக்கும் கை எலும்பு முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

நகை மீட்பு

பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட இளஞ்சிறாரை நெல்லை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 10 பவுன் தங்க நகைகள், 2 செல்போன்கள் மற்றும் வழிப்பறியில் ஈடுபடுவதற்காக பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட செல்வக்குமார் மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story