ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில்வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பை 100 சதவீதம் முடிக்க வேண்டும்: கலெக்டர்
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பை 100 சதவீதம் முடிக்க வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை 100 சதவீதம் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.
தாலுகா அலுவலகத்தில் ஆய்வு
ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நினைவூட்டுக் குறிப்பேடு, காலமுறை பதிவேடு மற்றும் முக்கிய ஆணைகள் அடங்கிய தொகுப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் அதிகாரிகளிடம் கூறுகையில், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
ஆதார் இணைப்பு
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை விரைவுபடுத்தி, 100 சதவீதம் முடிக்க வேண்டும். ஆதார் சேவை மையத்துக்கு புதிதாக ஆதார் அட்டை எடுக்கவும், ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ளவும் வருகைதரும் பொதுமக்களின் கோரிக்கைகளை விரைவாக நிவர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும். இதில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும். மின்னணு குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்க வேண்டும். பட்டா மாறுதல் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என்றார்.
ஆதனூர் ஊராட்சியில் செயலாளராகப் பணிபுரிந்து இறந்த புனிதராஜ் மகள் டெய்சிக்கு என்பவர் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற வழங்கப்படும் ஒருங்கிணைந்த சான்றிதழ் வேண்டி அளித்த மனுவை பரிசீலித்து அவருக்கு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.
கலந்துகொண்டவர்கள்
ஆய்வின்போது உதவி கலெக்டர் (பயிற்சி) பிரபு, ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வக்குமார், மண்டல துணை தாசில்தார்கள் இசக்கி முருகேஸ்வரி, வடிவேல், வட்ட வழங்கல் அலுவலர் கருப்பசாமி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ராதா மகேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.