ஒழுங்குமுறை கூடங்கள் மூலம் சாதனை:ஒரே ஆண்டில் 2,40,000 டன்வேளாண் விளைபொருட்கள் விற்பனைஅதிகாரி தகவல்
ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம், ஒரே ஆண்டில் 2 லட்சத்து 40 ஆயிரம் டன் வேளாண் விளை பொருட்கள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக, ஈரோடு மாவட்ட வேளாண் விற்பனைக்குழு செயலாளர் சாவித்திரி தெரிவித்துள்ளார்.
ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம், ஒரே ஆண்டில் 2 லட்சத்து 40 ஆயிரம் டன் வேளாண் விளை பொருட்கள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக, ஈரோடு மாவட்ட வேளாண் விற்பனைக்குழு செயலாளர் சாவித்திரி தெரிவித்துள்ளார்.
வேளாண் விளைபொருட்கள்
ஈரோடு மாவட்ட வேளாண் விற்பனைக்குழு செயலாளர் சாவித்திரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
ஈரோடு மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ், 18 ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள், 2 துணை ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள், 2 துணை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, மஞ்சள், தேங்காய், கொப்பரை தேங்காய் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வேளாண் விளை பொருட்களை ஏல முறையில் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
கடந்த 2022 -2023-ம் நிதி ஆண்டில் அதாவது ஒரே ஆண்டில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 63 டன் வேளாண் விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசுக்கு ரூ.14 கோடியே 24 லட்சம் வருவாய் கிடைத்தது. மேலும் 80 ஆயிரத்து 101 டன் விளை பொருட்களை பரிவர்த்தனை மற்றும் இருப்பு வைத்து, பொருளீட்டு கடனாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ரூ.1 கோடியே 11 லட்சம் கடன் பெற்றுள்ளனர்.
கொப்பரை தேங்காய்
காய்கறி, கீரை, பழங்கள், இதர வேளாண் பொருட்கள் சத்தியமங்கலம், கோபி, புஞ்சைபுளியம்பட்டி, அந்தியூர், கொடுமுடி, அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூட குளிர்பதன கிடங்குகளில் 5 ஆயிரத்து 489 டன் இருப்பு வைத்து விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். தேசிய வேளாண் சந்தை திட்டத்தில், ஈரோடு, பெருந்துறை, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம் விற்பனை கூடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டில் அவல்பூந்துறை, பூதப்பாடி, பவானி, கொடுமுடி, சிவகிரி, புஞ்சைபுளியம்பட்டி, தாளவாடி, வெள்ளாங்கோவில், எழுமாத்தூர் ஆகிய ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் 35 ஆயிரத்து 300 டன் விளை பொருட்கள் ரூ.224 கோடியே 32 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.
மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தில் அவல்பூந்துறை, எழுமாத்தூர், கொடுமுடி, சத்தியமங்கலம் ஆகிய ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 81 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு, அவல்பூந்துறை, எழுமாத்தூர், கொடுமுடி, சிவகிரி, பவானி, மைலம்பாடி, பூதப்பாடி, கவுந்தப்பாடி, கோபி, சத்தி, வெப்பிலி ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. இவற்றை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் ஈரோடு மாவட்ட வேளாண் விற்பனைக்குழு செயலாளர் சாவித்திரி தெரிவித்து உள்ளார்.