போதை பொருள் இல்லாத தமிழகமாக மாற்றுவது எங்கள் ேநாக்கம்; டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி


போதை பொருள் இல்லாத தமிழகமாக மாற்றுவது எங்கள் ேநாக்கம்; டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி
x
வேலூர்

6 மாத காலத்தில் போதை பொருள் இல்லாத தமிழகமாக மாற்றுவது எங்கள் நோக்கம் என்று வேலூரில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.

பாதுகாப்பு பணி

தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று வேலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள 1,484 காவல் நிலையத்தையும் போதை பொருள் இல்லாத காவல் நிலையங்களாக மாற்றுவோம். அடுத்த கட்டமாக போதை பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற அதிகாரிகளுக்குள் போட்டி வைத்துள்ளோம். இன்னும் 6 மாத காலத்தில் போதை பொருள் இல்லாத தமிழகமாக மாற்றுவது எங்கள் நோக்கமாக உள்ளது.

தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 10 ஆயிரம் காவலர்கள் குற்ற சம்பவங்களை தடுத்து பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க சீருடையிலும், சாதாரண உடையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். வாகன நெரிசல் பெரும் சவாலாக உள்ளது. அதை சரி செய்யவும் இரவு முழுவதும் காவலர்கள் ஈடுபட்டுள்ளார்கள். பொது மக்கள் காவல் துறையோடு ஒத்துழைக்க வேண்டும்.

சோதனை தீவிரம்

தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் கஞ்சா விற்பனை செய்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்து, சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளோம். ஆந்திராவை சேர்ந்த கஞ்சா வியாபாரிகளை அங்கேயே சென்று கைது செய்துள்ளோம். இதனால் வெகுவாக தமிழகத்தில் கஞ்சா விற்பனை ஒடுக்கப்பட்டுள்ளது. கைது செய்து, சிறையில் அடைத்து, சொத்துக்களை பறிமுதல் செய்த பிறகும் கஞ்சா விற்ற 740 பேரின் பழைய வழக்கில் ஜாமீனை ரத்து செய்துள்ளோம்.

கஞ்சா விற்பனை பெரும்பாலான இடங்களில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தக்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகத்தை பொறுத்தவரைக்கும் கஞ்சா கடத்தலில் ஆந்திராவை ஒட்டிய 6 சோதனை சாவடிகள் முக்கியமானதாக இருந்து வருகிறது. அங்கு சோதனையை தீவிரப்படுத்தி வருகிறோம்.

கஞ்சா வியாபாரிகளும் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறார்கள். இதை ஒரு போதைக்கு எதிரான போராகத்தான் பார்க்கிறோம். போர் தொடுத்துள்ளோம். ஓரிரு இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. இறுதி போரில் வெற்றி பெறுவது தான் எங்கள் நோக்கம். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆணையம் குறிப்பிட்ட காவலர்கள் 9 பேரிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story