தூத்துக்குடி மாவட்டத்தில் 107 மையங்களில்22,343 பேர் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதினர்
தூத்துக்குடி மாவட்டத்தில் 107 மையங்களில் 22,343 பேர் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதினர்
தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டு இருந்த 107 தேர்வு மையங்களில் 22 ஆயிரத்து 343 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். 888 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கின. இந்த தேர்வு எழுத 384 தனித்தேர்வர்கள் உள்பட 11 ஆயிரத்து 595 மாணவர்கள், 11 ஆயிரத்து 636 மாணவிகள் ஆக மொத்தம் 23 ஆயிரத்து 231 பேருக்கு தேர்வு எழுதுவதற்காக ஹால்டிக்கெட்டுகள் அனுப்பப்பட்டன. 230 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வு எழுதினர். இதற்காக 107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன. நேற்று காலையில் மொழித்தாள் தேர்வு நடந்தது. இதனால் காலை முதல் மாணவ, மாணவிகள் ஆர்வமாக பள்ளிக்கூடத்துக்கு சென்றனர். தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.
22,343 பேர் தேர்வெழுதினர்
இந்த தேர்வில் 10 ஆயிரத்து 974 மாணவர்கள், 11 ஆயிரத்து 369 மாணவிகள் ஆக மொத்தம் 22 ஆயிரத்து 343 பேர் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்கள் 36 பேர் உள்பட மொத்தம் 888 பேர் நேற்று தேர்வு எழுதவில்லை. மேலும் மாவட்டத்தில் 22 வினாத்தாள் கட்டுக்காப்பகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வினாத்தாள் கட்டுக்காப்பகங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வினாத்தாள் கட்டுக்காப்பகங்களில் இருந்து வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல 22 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பறக்கும்படை
மேலும் இந்த தேர்வை கண்காணிக்க 107 முதன்மை கண்காணிப்பாளர்கள், 107 துறை அலுவலர்கள், 1200 அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 214 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.