நாகை புதிய கடற்கரையில் 'காத்து வாங்கும்' புறக்காவல் நிலையம்
நாகை புதிய கடற்கரையில் உள்ள புறக்காவல் நிலையம் மூடப்பட்டு காத்து வாங்கும் நிலையில் இருப்பதால், கடற்கரையில் இருக்கைகள், விளையாட்டு உபகரணங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தி வருகிறார்கள்.
நாகை புதிய கடற்கரையில் உள்ள புறக்காவல் நிலையம் மூடப்பட்டு காத்து வாங்கும் நிலையில் இருப்பதால், கடற்கரையில் இருக்கைகள், விளையாட்டு உபகரணங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தி வருகிறார்கள்.
புதிய கடற்கரை
வங்கக்கடலோரம் அமைந்த எழில்மிகு நகரம் நாகை. சோழர் கால வரலாற்று சிறப்பம்சங்களை கொண்ட இந்த நகரம் ஒரு காலத்தில் உலக அளவில் பிரசித்திப்பெற்ற துறைமுக நகரமாக திகழ்ந்தது. இங்கிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு கப்பல் மூலமாக வணிகம் நடந்து வந்தது. ஆனால் இன்று அத்தகைய சிறப்புகள் ஏதுமில்லாத கடற்கரை நகரமாக நாகை திகழ்ந்து வருகிறது.
நாகை நகருக்கு என்று உள்ள ஒரே பொழுதுபோக்கு அம்சம் புதிய கடற்கரை ஆகும். கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையால் நாகை கடற்கரை சிதிலமடைந்தது. இதைத்தொடர்ந்து நாகை புதிய கடற்கரை மீண்டும் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டது.
விளையாட்டு பூங்கா
சிறுவர் விளையாட்டு பூங்கா, நடைப்பயிற்சி மேடை, கடற்கரையில் வாலிபால், கால்பந்து விளையாடுவதற்கான வசதிகள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நாகை புதிய கடற்கரையில் ஏற்படுத்தப்பட்டன.
இங்கு காலை, மாலை நேரங்களில் ஏராளமானோர் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து கடற்கரையில் காற்று வாங்கி உற்சாகமாக பொழுதுபோக்குகிறார்கள்.
புறக்காவல் நிலையம்
இங்குள்ள இருக்கைகள், விளையாட்டு உபகரணங்கள் மர்ம நபர்களால் அடிக்கடி சேதப்படுத்தப்பட்டு வந்தன. இது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனால் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் புதிய கடற்கரையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அங்கு போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் நாகை புதிய கடற்கரையில் சேதம் அடைந்த விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் புதிதாக அமைக்கப்பட்டன.
கண்காணிப்பில் இல்லை
ஆனால் காலப்போக்கில் இங்குள்ள புறக்காவல் நிலையம் செயல்படாமல் போனது. போலீசார் வராததால் புறக்காவல் நிலையம் மூடப்பட்டது. இதனால் நாகை புதிய கடற்கரை போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் இல்லாமல் போய்விட்டது.
எனவே நாகை புதிய கடற்கரையில் சமூக விரோதிகள் மீண்டும் அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விட்டனர். அங்குள்ள இருக்கைகள் விளையாட்டு உபகரணங்கள் மர்ம நபர்களால் ஒவ்வொன்றாக உடைத்து, சேதப்படுத்தப்பட்டு வருகிறது. உடைக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள், புறக்காவல் நிலையத்திலேயே மொத்தமாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் உடைந்த பொருட்கள் வைக்கும் குடோன் போல புறக்காவல் நிலையம் காட்சி அளிக்கிறது.
புதுப்பொலிவு பெறுமா?
நாகை நகரின் ஒரே பொழுதுபோக்கு அம்சமாக விளங்கும் புதிய கடற்கரை சமூக விரோதிகளால் சீர் கெட்டு கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மூடப்பட்டிருக்கும் புறக்க காவல் நிலையத்தை மீண்டும் திறந்து, மீண்டும் புதிய கடற்கரையை புதுப்பொலிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
போலீசாரை நியமித்து...
நாகையை சேர்ந்த மணிமாறன்:-
நாகை புதிய கடற்கரையில் குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சல்கள், சீசா உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
இரவில் மின் விளக்குகள் ஒளிராமல் இருப்பது சமூக விரோதிகளுக்கு வசதியாகி விட்டது. எனவே நாகை புதிய கடற்கரையில் வெறுமனே காத்து வாங்கும் புறக்கவல் நிலையத்தை மீண்டும் திறந்து போலீசாரை நியமித்து செயல்பட வைக்க வேண்டும். உடைக்கப்பட்ட அனைத்து விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகளை மீண்டும் புதிதாக அமைக்க வேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாப்பாக கடலோர காவல் படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
கடும் நடவடிக்கை
நாகையை சேர்ந்த மகாலிங்கம்:-
நாகை புதிய கடற்கரைக்கு தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதற்காக வருவேன். இங்குள்ள ஊஞ்சலில் ஆட்கள் உட்கார்ந்தாலே, அறுந்து விழும் நிலை உள்ளது. புதிய கடற்கரையில் உள்ள விளையாட்டு உபகரணங்களை தரமாக அமைக்க வேண்டும். நாகை புதிய கடற்கரையில் உள்ள பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தும் மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் புறக்காவல் நிலையத்தை மீண்டும் செயல்பட வைக்க வேண்டும். இதன் மூலம் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.