ரூ.7½ கோடியில் புற நோயாளிகள் கட்டிடம்
பேரணாம்பட்டு அரசு மருத்துவ மனையில் ரூ.7½ கோடியில் புற நோயாளிகள் கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை கடந்த 2019- 2020-ம் ஆண்டில் ரூ.7 கோடியே 58 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பொது வெளி நோயாளிகள் வார்டு இரண்டு தளததுடன், 50 படுக்கை வசதியுடன் ஆபரேஷன் தியேட்டர், ரத்த சேமிப்பு, குழந்தைகள் வார்டு, பிரசவ வார்டு, பொது மருத்துவ வார்டு கட்டப்பட்டு பணிகள் நிறை பெற்றுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து பேரணாம்பட்டு அரசு மருத்துவ மனையில் நடந்த விழாவுக்கு மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பாலச்சந்தர் தலைமை தாங்கினார். பேரணாம்பட்டு நகராட்சி தலைவர் பிரேமா வெற்றிவேல், துணைத்தலைவர் ஆலியார்ஜூ பேர் அஹம்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமலு விஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார். மருத்துவ அதிகாரி செந்தில் குமார் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ஜனார்த்தனன், டேவிட், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜமார்த்தாண்டன், அரசு மருத்துவர் நிஷா, நகராட்சி கவுன்சிலர்கள் அப்துல் ஜமீல், அஹம்மத் பாஷா, கோவிந்தராஜ், நகர தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.