புற நோயாளிகள் சீட்டு வழங்குமிடத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம்


புற நோயாளிகள் சீட்டு வழங்குமிடத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம்
x

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற நோயாளிகள் சீட்டு வழங்குமிடத்தில் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் பொதுமக்கள் அவதி அடைகின்றனர். கூடுதல் கவுண்ட்டர்கள் ஏற்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு புதுக்கோட்டை நகரப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து சிகிச்சைக்காக பொதுமக்கள் அதிகமாக வந்து செல்வது உண்டு. புற நோயாளிகள் பிரிவில் தினமும் சராசரியாக 800-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

உள்நோயாளிகளாக 600 முதல் 700 நோயாளிகள் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என்பதால் உயர் ரக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதால் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக்கு சிகிச்சைக்காக இங்கு வருவார்கள்.

சீட்டு வழங்குமிடம்

புற நோயாளிகள் பிரிவு தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும். இந்நேரத்தில் புற நோயாளிகள் பிரிவில் சீட்டு வழங்குமிடத்தில் நோயாளிகள் தங்களது பெயர், வயது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் எந்த மாதிரியான நோய் பாதிப்புக்கு சிகிச்சைக்கு வந்துள்ளதை தெரிவிக்க வேண்டும். அதற்கேற்ப அந்த சீட்டில் மருத்துவமனை ஊழியர்கள் பதிவு செய்யும் போது அந்த சிகிச்சை பிரிவையும் குறிப்பிட்டு விடுவார்கள்.

அந்த சீட்டினை கொண்டு சம்பந்தப்பட்ட பிரிவில் மருத்துவரை சந்தித்து தங்களுக்கு ஏற்பட்ட நோய்கள் குறித்து தெரிவிப்பார்கள். அதற்கேற்ப மருத்துவர்கள் சிகிச்சை அளித்து, மருந்து சீட்டு எழுதி கொடுத்து அதனை மருத்துவமனை வளாகத்தில் மருந்து வழங்குமிடத்தில் காண்பித்து பெற்றுக்கொள்ள அறிவுறுத்துவது உண்டு. அதன்படி பொதுமக்கள் அந்த மருந்தினை வாங்கி செல்வார்கள்.

2 கவுண்ட்டர்கள்

இதற்கிடையில் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் மருத்துவமனைக்கு வந்து சரிபார்த்து கொள்ளவும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். அதன்படி குறிப்பிட்ட நாட்களுக்கான மருந்துகள் முடிந்த பின் அல்லது மருத்துவர்கள் குறிப்பிட்ட நாட்களில் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் வருவார்கள். மேலும் புற நோயாளிகள் பிரிவு சீட்டு வழங்குமிடத்தில் மீண்டும் தங்களது பழைய சீட்டினை காண்பித்து பதிவு செய்துக்கொள்வார்கள்.

இந்த நடைமுறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ளது. புற நோயாளிகள் பிரிவில் சீட்டு வழங்குமிடத்தில் 2 கவுண்ட்டர்கள் உள்ளது. இதில் ஒரு கவுண்ட்டர் புதிதாக புற நோயாளிகளாக வருபவர்கள் பதிவு செய்யும் இடமாகும். அதன் அருகே உள்ள மற்றொரு கவுண்ட்டர் ஏற்கனவே புற நோயாளி சீட்டு பெற்று சிகிச்சை பெற்று மீண்டும் சிகிச்சைக்காக வருபவர்கள் பதிவு செய்யும் கவுண்ட்டர் ஆகும். இந்த 2 கவுண்ட்டர்களில் மருத்துவமனை பணியாளர்கள் அமர்ந்து நோயாளிகளின் விவரங்களை பதிவு செய்து சீட்டு வழங்கி வருகின்றனர்.

காத்திருக்கும் அவலம்

இந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக பொதுமக்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இதனால் புற நோயாளிகள் சீட்டு வழங்குமிடத்தில் 2 கவுண்ட்டர்கள் மட்டுமே செயல்படுவதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதில் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். ஏற்கனவே உடல் உபாதைகள் பாதிப்பால் சிகிச்சைக்காக வருகிற நிலைமையில் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் போது கூடுதல் சிரமம் ஏற்படுகிறது.

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு புற நோயாளிகள் சீட்டு வழங்க தனி கவுண்ட்டர்கள் வசதி உள்ளது. ஆனால் அந்த கவுண்ட்டர்கள் மூடியே கிடக்கிறது. இதனால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். எனவே புற நோயாளிகள் சீட்டு வழங்குமிடத்தில் கூடுதல் கவுண்ட்டர்கள் ஏற்படுத்த வேண்டும் எனவும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான சீட்டு வழங்குமிடத்தில் மூடி கிடக்கும் கவுண்ட்டர்களை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பொதுமக்கள் தரப்பில் தெரிவித்ததாவது:-

கூடுதல் கவுண்ட்டர்கள்

நுகர்வோர் அமைப்பை சேர்ந்த கனகராஜ்:- "புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு புற நோயாளிகள் சிகிச்சைக்காக வருகிற இடத்தில் சீட்டு வழங்குமிடத்தில் பெயரை பதிவு செய்ய காத்திருக்கும் போது மேலும் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க மாற்று ஏற்பாடாக கூடுதல் கவுண்ட்டர்களை ஏற்படுத்த வேண்டும். அதில் பொதுமக்கள் பெயர், விவரங்களை பதிவு செய்து சீட்டு பெற்று எளிதில் செல்ல முடியும். வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.''

கூடுதல் மருத்துவர்கள் வேண்டும்

பொக்கிசக்காரன்பட்டியை சேர்ந்த தமிழரசி:- "இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றால் புற நோயாளிகள் சீட்டு வாங்குவதற்கே மணிக்கணக்கில் நிற்க வேண்டியுள்ளது. உடல்நலம் சரியில்லாமல் வரும் நாங்கள் எவ்வளவு நேரம்தான் கால்கடுக்க காத்து நிற்க முடியும். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அனைவருக்கும் அமர்ந்து சிகிச்சை பெற இருக்கைகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மருத்துவமனையில் பெண்கள் பயன்படுத்தக்கூடிய கழிவறைகள் சுத்தமாக இல்லாததால் துர்நாற்றம் வீசுகிறது.

நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் கழிவறைகளை அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு போதிய அளவு இருக்கைகள் ஏற்படுத்திக்கொடுக்கவும் நீண்ட நேரம் நோயாளிகளை காத்திராமல் இருக்க கூடுதல் செவிலியர் மற்றும் மருத்துவப்பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டுமெனவும் மருத்துவர்கள் பற்றாக்குறையை சரிசெய்து கூடுதலாக மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும்''

பஸ் வசதி

ஆரியூர் முத்துச்சரவணன்:- "அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுகாதார வசதி மேம்படுத்த வேண்டும். மருத்துவமனையில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. கழிவறைகள் சரியாக சுத்தப்படுத்தப்படாமல் உள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் புற நோயாளிகள் சீட்டு பெறுவதற்கான கவுண்ட்டர்கள் மூடி கிடப்பதை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.''

தரையில் அமருகிறார்கள்

சலோமி:- "புற நோயாளிகள் சிகிச்சை பிரிவை பார்க்கும் நேரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் அந்த குறிப்பிட்ட நேரத்தில் பஸ்கள் வரும் போது புற நோயாளிகள் சிகிச்சைக்காக வருபவர்கள் கூட்டம் அதிகமாகுகிறது. வரிசையில் காத்திருப்பவர்கள் நிற்க முடியாமல் சில நேரங்களில் அங்கேயே தரையில் அமர்ந்து விடுகின்றனர். ஏற்கனவே உடல் நலம் சரியில்லாத போது தற்போது இங்கு வரிசையில் காத்திருக்கும் போது ஏற்படும் அவலத்தால் கூடுதல் பாதிப்படைகின்றனர். எனவே புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் உடனடியாக பெயரை பதிவு செய்து சிகிச்சை பெற்றும் செல்லும் வகையில் வசதி ஏற்படுத்த வேண்டும்''

உரிய நடவடிக்கை

இதுகுறித்து மருத்துவமனை வட்டாரத்தில் கேட்ட போது, "மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நோயாளிகள் மருத்துவமனையை தங்கள் வீடு போல எண்ணி கடைப்பிடிக்க வேண்டும். புற நோயாளிகள் பிரிவில் சீட்டு வழங்குமிடத்தில் சில நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படும். பஸ்கள் வருகிற நேரத்தில் பொதுமக்கள் அதிகம் வருவார்கள். அதன்பின் கூட்டம் இருக்காது. இது போன்ற நிலை தான் உள்ளது. இருப்பினும் புற நோயாளிகள் பாதிப்படையாத வகையில் சீட்டு வழங்குமிடத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்''.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story