மலை கிராமத்தில் புறக்காவல் நிலையம்


மலை கிராமத்தில் புறக்காவல் நிலையம்
x

வாணியம்பாடி அருகே உள்ள வெலதிகாமணி பெண்டா மலை கிராமத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தெரிவித்தார்.

திருப்பத்தூர்

விழிப்புணர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள வெலதிகாமணிபெண்டா மலை கிராமத்தில் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமை வகித்தார். ஊராட்சிமன்ற தலைவர் என்.செல்வி நாகபூஷன் முன்னிலை வகித்தார். தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழக- ஆந்திர எல்லைப் பகுதியில் சாராயம் காய்ச்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கு கிராம மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். கிராமத்தில் புதிய நபர்கள் நடமாட்டம் இருந்தாலும், சமூக விரோத செயல்களில் ஈடுபட்டாலும் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் திருந்தி வாழ அரசு சார்பில் பல திட்டங்கள் உள்ளது. அதன் மூலம் பயனடைய நடவடிக்கை எடுக்கப்படும்.

புறக்காவல் நிலையம்

இந்தப்பகுதி தமிழக- ஆந்திர எல்லைப் பகுதி என்பதால் குற்றசெயல்களை தடுப்பதற்காக இப்பகுதியில் நிரந்தரமாக புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அப்பகுதி மக்கள் பேசுகையில் விவசாயத்திற்காக மின் இணைப்புப் பெற ரூ.3 லட்சம் செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரே ஒரு அரசு பஸ் மலை பகுதிக்கு வந்து செல்கிறது. கூடுதல் பஸ் இயக்க வேண்டும். மலைப்பகுதியில் செயல் பட்டு வந்த அம்மா மருத்துவமனை திடீரென மூடப்பட்டு விட்டது. எனவே அரசு மருத்துவமனை இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். அதனால் மருத்துவமனை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு உங்கள் பிரச்சினைகள் குறித்து உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

கூட்டத்தில் பொதுமக்கள், காவல்துறையினர் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் நன்றி கூறினார்.

சோதனை சாவடியில் ஆய்வு

அதனைத் தொடர்ந்து தமிழக- ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார். அப்போது ஆந்திராவில் இருந்து வரக்கூடிய வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து அனுப்ப வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அண்ணா நகர் பகுதியில் அமைக்கப்பட்டு தற்போது மூடப்பட்டுள்ள சோதனை சாவடி மையத்தில் ஆய்வு செய்தார். அங்கு பல முறைகேடுகள் நடப்பதாக தெரிவித்ததின் பேரில் சோதனை செய்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, அந்த சோதனை சாவடிக்கு நிரந்தரமாக பூட்டு போட போலீசாருக்கு உத்தரவிட்டார்.


Next Story