ராஜகணபதி நகர்-மேல்ஆலத்தூர் இடையே கவுண்டன்ய மகாநதி ஆற்றில் மேம்பாலம்


ராஜகணபதி நகர்-மேல்ஆலத்தூர் இடையே கவுண்டன்ய மகாநதி ஆற்றில் மேம்பாலம்
x

குடியாத்தத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கவுண்டன்ய மகாநதி ஆற்றின் குறுக்கே, ராஜகணபதி நகர்- மேல்ஆலத்தூர் இடையே மேம்பாலம் கட்டுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வேலூர்

போக்குவரத்து நெரிசல்

குடியாத்தம் நகராட்சி பகுதியில் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் இருகரைகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து ஆற்றின் இருகரைகளிலும் வெள்ளத்தை தடுக்கும் வகையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கரை அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் குடியாத்தம் காமராஜர் பாலத்தில் மட்டுமே போக்குவரத்து நடைபெறுகிறது. அப்போது பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதிகாரிகள் ஆய்வு

அதன் ஒரு பகுதியாக குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ராஜகணபதி நகர் வழியாக மேல்ஆலத்தூர் ரோடு செல்லும் வழியில் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

மேலும் ராஜகணபதி நகர்-மேல்ஆலத்தூர் இடையே செல்லும் கவுண்டன்ய ஆற்றில் தற்போது செயல்படுத்தப்பட உள்ள வெள்ள தடுப்பு கரை மீது அங்கிருந்து நெல்லூர்பேட்டை, சேம்பள்ளி கூட்ரோடு வரை இரண்டு கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை வேலூர் கோட்ட செயற் பொறியாளர் ஆர்.ரமேஷ், உதவி செயற் பொறியாளர் பி.கோபி, குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற் பொறியாளர் ஆர்.எஸ்.சம்பத்குமார், உதவி பொறியாளர்கள் பி.யோகராஜ், ராஜேஷ், அரசு வழக்கறிஞர் எஸ்.பாண்டியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேம்பாலம்

இதுகுறித்து நீர்வளத்துறை செயற் பொறியாளர் ரமேஷ் கூறுகையில், 'கவுண்டன்ய மகாநதி ஆற்றில் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட இரண்டு பக்க கரைகளில் தலா 2½ கிலோ மீட்டர் நீளத்திற்கு, 5 மீட்டர் உயரத்தில் வெள்ள தடுப்பு கரை அமைக்கப்படுகிறது.

தற்போது புதிதாக ராஜகணபதி நகர், மேல்ஆலத்தூர் ரோடு நடுவில் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போல் வெள்ள தடுப்பு கரை மீது ராஜகணபதி நகர்- மேல்ஆலத்தூர் ரோடு நடுவே கவுண்டன்ய மகாநதி ஆற்றின் ஓரம் தொடங்கி சேம்பள்ளி கூட்ரோடு வரை சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கவும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு பணிகள் முடிக்கப்பட்டு இதன் விவரங்கள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடனடியாக இப்பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


Next Story