பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்


பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
x

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இருக்கை கிடைக்காமல் படிக்கட்டில் அமர்ந்து பொதுமக்கள் பயணம் செய்தனர்.

திண்டுக்கல்

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இருக்கை கிடைக்காமல் படிக்கட்டில் அமர்ந்து பொதுமக்கள் பயணம் செய்தனர்.

பொங்கல் பண்டிகை

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை ஆகும். எனவே தங்கள் குடும்பத்தினரை பிரிந்து வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள், கல்லூரிகளில் படிப்பவர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்துக்காக சொந்த ஊர்களுக்கு நேற்று முதல் செல்ல தொடங்கினர்.

அதேபோல் திண்டுக்கல்லில் இருந்து வெளியூர்களுக்கு சென்றவர்களும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்துக்காக திண்டுக்கல்லுக்கு வருகின்றனர். இதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பே பஸ், ரெயில்களில் டிக்கெட் முன்பதிவும் செய்திருந்தனர். ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிப்பதற்காக திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நேற்று குவிந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்லும் ரெயில்கள் வந்ததும் முன்பதிவில்லா பெட்டிகளில் முண்டியடித்துக்கொண்டு ஏறி இடம்பிடித்தனர்.

படிக்கட்டில் அமர்ந்து...

ரெயில் பெட்டிகளில் இடம் கிடைக்காதவர்கள் கழிப்பறைக்கு அருகிலும், படிக்கட்டிலும் அமர்ந்து பயணம் செய்தனர். மேலும் சரக்குகளை கொண்டு செல்வதற்காக இணைக்கப்பட்ட பெட்டிகளையும் பயணிகள் ஆக்கிரமித்தனர். டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்தனர்.

இதனால் அந்த பெட்டிகளில் பயணம் செய்தவர்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் பஸ்களில் இடம் கிடைக்காதவர்களும் ரெயில் நிலையத்துக்கு நேற்று படையெடுத்தனர். இதனால் திண்டுக்கல் வழியாக சென்ற அனைத்து ரெயில்களும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பயணிகள் கூட்டம் அலைமோதியதால், ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரம் காத்திருப்பு

பொங்கல் பண்டிகைக்காக மதுரையில் இருந்து திண்டுக்கல் வழியாக திருச்சி, சென்னை, ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இதேபோல் திண்டுக்கல் பஸ் நிலையத்திலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

குளிர்சாதன வசதி கொண்ட சொகுசு பஸ்களில் கூட சாதாரண கட்டணம் செலுத்தி செல்லும் பஸ்களில் இருப்பது போல் இருக்கை கிடைக்காமல் நின்றபடி மக்கள் பயணம் செய்தனர். ஆனாலும் நேற்று மாலையில் இருந்து பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது. இதனால் தங்கள் ஊர்களுக்கு செல்லும் பஸ்களுக்காக அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.


Next Story