பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்; 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்


பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்; 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
x

சபரிமலை சீசன், வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் படையெடுத்தனர். 3 மணி நேரம் காத்திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல்

சபரிமலை சீசன், வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் படையெடுத்தனர். 3 மணி நேரம் காத்திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சபரிமலை சீசன்

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். தைப்பூசம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.

இதேபோல் முகூர்த்தம், மாதப்பிறப்பு, கிருத்திகை, வாரவிடுமுறை உள்ளிட்ட நாட்களில் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர்.

தற்போது கார்த்திகை மாதம் என்பதால் அய்யப்பன் சீசன் தொடங்கியுள்ளது. சபரிமலைக்கு சென்றுவிட்டு வரும் அய்யப்ப பக்தர்களும் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இதனால் பழனியில் காலை, மாலை வேளையில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

3 மணி நேரம் காத்திருப்பு

இந்தநிலையில் இன்று வாரவிடுமுறை, முகூர்த்தநாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்தனர். அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோவில், அய்யம்புள்ளி ரோடு ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் வருகை அதிகரிப்பால் ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்தில் கடும் கூட்டம் காணப்பட்டது. மேலும் கோவிலில் உள்ள பொது, கட்டளை, கட்டண தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகள், மலைக்கோவில் வெளிப்பிரகாரம் ஆகிய இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அந்தவகையில் சுமார் 3 மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

வாகன நிறுத்தமாக மாறிய கிரிவீதிகள்

பழனிக்கு வருகை தரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு கிழக்கு, மேற்கு கிரிவீதிகளில் சுற்றுலா பஸ்நிலையம் உள்ளது. இங்கு கட்டணம் இன்றி கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களை பக்தர்கள் நிறுத்துகின்றனர். இந்தநிலையில் நேற்று வெளியூர் பக்தர்கள் வாகனங்களில் அதிகமாக வந்ததால், சுற்றுலா பஸ்நிலையம் வாகனங்களால் நிரம்பியது. அதைத்தொடர்ந்து அங்கு வாகனங்களை நிறுத்த இடமில்லாததால் பலர் கிரிவீதிகளில் வாகனங்களை நிறுத்தினர். இதனால் நடந்து சென்ற பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

சபரிமலை சீசன் தொடங்கினாலே பழனி அடிவாரத்தில் காலை, மாலை வேளையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கம். வார விடுமுறை என்பதால் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் அடிவாரம் பூங்கா ரோட்டின் ஓரம் லாரிகளை நிறுத்தி சரக்குகளை இறக்கினர். இதனால் அந்த சாலையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே காலை, மாலை வேளையில் சரக்கு வாகனங்கள் அடிவார பகுதிக்கு வர தடை விதிக்க வேண்டும். மேலும் கூட்டம் அதிகமாக காணப்படும்போது போக்குவரத்தை கட்டுப்படுத்த போதிய அளவில் போலீசாரை நியமிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story