ஒட்டுமொத்த தூய்மை பணி
முதல்-அமைச்சர் வருகையையொட்டி சத்துவாச்சாரியில் ஒட்டுமொத்த தூய்மை பணி நடந்தது.
வேலூர்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 21-ந் தேதி வேலூர் மாவட்டத்துக்கு வருகை தர உள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.46 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் வேலூர் புதிய பஸ்நிலையத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதையொட்டி வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளையும் தூய்மைப்படுத்தும்படி மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் ஆகியோர் உத்தரவிட்டனர். அதன்பேரில் 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட அலமேலுமங்காபுரம் முதல் கிரீன்சர்க்கிள் பகுதி வரையில் ஒட்டுமொத்த தூய்மை பணி நடந்தது. சுகாதார அலுவலர் லூர்துசாமி தலைமையில் 160 தூய்மை பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். சென்னை-பெங்களூரு அணுகுசாலையோரம், வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலம், கிரீன் சர்க்கிள் பகுதிகளில் கிடந்த கற்கள், குப்பைகள், மண் உள்ளிட்டவற்றை தூய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கானாற்றில் கழிவுநீர் செல்வதற்கு இடையூறாக கிடந்த கற்கள், குப்பைகள் அகற்றப்பட்டது. மேலும் நடைபாதை மற்றும் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.