கல்லூரி பேராசிரியர்களுக்கு மேல் அங்கி


விருதுநகர்

தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது பள்ளிக்கூட மாணவர்களுக்கு சீருடை திட்டத்தை கொண்டுவந்தார். மாணவர்களிடம் சமத்துவ உணர்வு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

தற்போது தனியார் கல்வி நிறுவனங்களின் வருகையால் அத்திட்டம், பலவித பரிணாமங்களை பெற்று நடைமுறையில் இருக்கிறது.

ஆடை கட்டுப்பாடு

பல வர்த்தக நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றிலும் சீருடை முறை பின்பற்றப்படுகிறது.

தங்கள் நிறுவனப்பணியாளர்களை அடையாளப்படுத்துவதற்காக இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதுபோல் டாக்டர்கள் வெள்ளை நிறத்திலும், வக்கீல்கள் கறுப்பு நிறத்திலும் கோட்டு அணிவதும் அதற்காகத்தான்.

சில கல்வி நிறுவனங்களில் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு ஆடைக்கட்டுப்பாடு தொடர்ந்து வருகிறது. சிலநேரங்களில் இதனால் சர்ச்சைகளும் எழுந்துவருகின்றன.

ஜன்னல் வைத்த ஜாக்கெட்

2008-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆடைக்கட்டுப்பாட்டில் சில உத்தரவுகளை பேராசிரியர்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டனர்.

2009-ம் ஆண்டு பள்ளி ஆசிரியைகள் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டோ, மெல்லிய உடைகளோ அணிந்து வர தடைவிதிக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகின.

2018-ல் ஒடிசா மாநில பள்ளி ஆசிரியைகள் கைத்தறி சேலை அணிந்துவரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2021-ம் ஆண்டில் கேரளாவில் கல்வி நிலையங்களில் பணியாற்றும் ஆசிரியைகள், பேராசிரியைகள் சேலை அணிந்துவர கட்டாயப்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதன்பின்னர், கேரள கல்வித்துறை அமைச்சகம் ஆடை அணிவதில் கட்டுப்பாடில்லை என்று கூறி அந்த புகாருக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மேல் அங்கி அணிய வேண்டும்

தற்போது தமிழக உயர்கல்வித்துறைக்கு வந்த ஒரு புகார் மனு அடிப்படையில், அனைத்து பல்கலைக்கழக பதிவாளர், கல்லூரிக்கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்துக்கு ஆடைக்கட்டுப்பாடு குறித்த ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.

அதில், 'கல்லூரிகளில் பேராசிரியர்கள் அனைவரும் தங்களை மாணவர்களிடம் இருந்து தனியாக வேறுபடுத்தி காட்டும் விதமாகவும், உடல் அமைப்பை மறைக்கும் விதமாகவும் 'மேல் அங்கி' (ஓவர் கோட்) அணிய வேண்டும். மேலும் பேராசிரியர்களுக்குள் ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும். இதற்கு அந்தந்த நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

உயர்கல்வித் துறையின் இந்த சுற்றறிக்கை உத்தரவா? அல்லது யோசனையா? புகார் மீதான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து இருக்கிறதா? என்பது எல்லாம் புரியாத புதிராக இருக்கின்றன. அதை உயர்கல்வித்துறை தெளிவுப்படுத்த வேண்டும். இருப்பினும், உயர்கல்வித்துறை கூறி இருப்பது போல, கல்லூரி பேராசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு என்பது அவசியமானதா?, அதை நடைமுறைப்படுத்துவது சரியாக இருக்குமா? என்பது குறித்து பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

வரவேற்பு

ராஜபாளையம் கல்லூரி மாணவி விஜயலட்சுமி:-

ஆள் பாதி, ஆடை பாதி என்பது போல பேராசிரியர்கள் ஓவர் கோட் அணிவது வரவேற்கத்தக்கது. ஏற்கனவே எங்கள் கல்லூரியில் பேராசிரியைகள் ஓவர்கோட் அணிந்து வருகிறார்கள். அவர்களை பார்க்கும் பொழுது அவர்கள் மீதான மதிப்பு மேலும் கூடுகிறது. இவர்களை போல பேராசிரியர்களும் கோட் அணிந்து வந்தால் மிகவும் நன்றாக தான் இருக்கும். பேராசிரியர்கள் தனித்துவமாக தெரிவார்கள். கோட் அணிந்து பாடம் நடத்தும் போது பல்கலைக்கழகங்கள், வெளிநாடுகளில் உள்ளதை போன்ற உணர்வு ஏற்படும்.

விருதுநகர் ஆங்கில பேராசிரியை ஜெயசித்ரா:-

வகுப்பறையில் பாடம் பயிற்றுவிக்கும் போது மாணவர்களின் கவனச்சிதறல் ஏற்படாமலிருக்க பயிற்றுவிக்கும் பேராசிரியைகளும் அந்த வகையில் ஆடை அணிவது முக்கியம். இதன் மூலமே மாணவர்களிடையே நல்லொழுக்கம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். எனவே கல்லூரி பேராசிரியைகள் ஓவர் கோட் அணிவது என்பது அவசியத்தான். இதற்கான நடவடிக்கை எடுக்கும் தமிழகஅரசுக்கும் அறிவுறுத்திய நீதிமன்றத்திற்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இதேபோன்று கல்லூரியில் பேராசிரியைகள் சீருடை அணிவதும் அவசியமான ஒன்று தான்.

ஏற்றத்தாழ்வு

வத்திராயிருப்பை சேர்ந்த அருள்மொழிஅரசி:-

கல்லூரியில் பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு என்பது மிக முக்கியமானது. கல்லூரிகளில் பேராசிரியர்கள் அணிந்து வரும் ஆடம்பர உடைகளால் மாணவர்கள் இடையே ஒருவிதமான கவன சிதறலையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தி வருகிறது. இதை தடுப்பதற்கு கோட் அணிவது மிகவும் சிறந்தது. பேராசிரியர்கள் கோட் அணியும் போது அவர்களுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் மறையும்.

சாத்தூர் கல்லூரி மாணவர் பால்பாண்டியன்:-

கல்லூரி பேராசிரியை ஒன்று போல் கோட் அணிவது வரவேற்கத்தக்க ஒன்று. பேராசிரியைகள் கோட் அணிந்து வருவதால் மாணவ-மாணவிகளை பார்க்கும் பொழுது வேற்றுமை உணர்வு விலகி, பேராசிரியை மற்றும் மாணவர்களுக்கு இடையே உள்ள பரஸ்பர ஒற்றுமை அதிகரிக்கும். மேலும் மாணவிகளும் இதேபோல் சீருடை அணிய வேண்டும் என்ற ஆசை வரும்.

உடன்பாடு இல்லை

அருப்புக்கோட்டை பேராசிரியை முத்து கிருஷ்ணவேணி:-

கல்லூரி பேராசிரியர்கள் கோட் அணிந்து வர வேண்டும் என்பது வரவேற்றத்தக்கது. இருப்பினும் ஓவர் கோட் அணிவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதற்கு பதிலாக நமது கலாசாரத்திற்கு ஏற்ற வகையிலும் சீதோஷ்ன நிலையை பொருத்தும் சீருடை அணியலாம்.

விருதுநகரை சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் கண்ணகி:-

நான் பெண்கள் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பெண்கள் கல்லூரியில் மாணவிகளுக்கும், பேராசிரியைகளுக்கும் மாறுபாடு தெரிவதற்காக பேராசிரியைகள் தலையில் கொண்டை போட்டு இருப்பார்கள். அங்கு உடை பிரச்சினை ஏதும் வர வாய்ப்பு இல்லை. இரு பாலர் படிக்கும் கல்லூரிகளில் பேராசிரியைகள் வகுப்பறை மத்தியில் நின்று பாடம் எடுக்கும் பொழுது மாணவ-மாணவிகளின் கவனம் அவர்கள் எடுக்கும் பாடத்தில் தான் இருக்க வேண்டும். அவர்கள் உருவத்தில் இருக்கக் கூடாது. ஆனால் நகர்ப்புறங்களில் உள்ள கல்லூரிகளில் சமீப காலமாக பேராசிரியைகளின் உடைகள் பிறர் கவனத்தை ஈர்ப்பதாகவே உள்ளது. எனவே இருபாலர் படிக்கும் கல்லூரிகளில் பேராசிரியைகள் ஓவர் கோட் அணிவது நன்மை பயக்கும் என்றே கருதுகிறேன்.


Next Story