ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.
சிறப்பு வழிபாடு
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்படி, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் காலை 6 மணி அளவில் மூலவர் அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பகல் 12 மணியளவில் உச்சி கால பூஜை நடந்தது. அதன் பின்னர் மாலையில் உற்சவர் அம்மனுக்கு கோவில் முன்மண்டபத்தில் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இரவு ஏழு மணி அளவில் தங்க ரதத்தில் எழுந்தருளி அம்மன் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் உள்ள ஞானாம்பிகை-காளகத்தீஸ்வரர் மற்றும் அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதேபோல் திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோடு பாலநாகம்மாள் கோவிலில் ஆடி உற்சவ திருவிழா நடந்தது. இதில் காலையில் ஹோமம், இரவு 7 மணி அளவில் அலங்கார மின்தேரில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. மேலும் திண்டுக்கல் நாகல் நகர் புவனேஸ்வரி அம்மன் கோவில், மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பால்குட ஊர்வலம்
நத்தம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் வெள்ளி கவச அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், நத்தம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோல் பகவதி அம்மன், காளியம்மன், ராக்காயி, தில்லை காளியம்மன் ஆகிய கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
வேடசந்தூர் அருகே காளனம்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி பெண் பக்தர்கள் 108 பால்குடங்கள் எடுத்து ஊர்வலமாக புறப்பட்டு காளனம்பட்டியில் உள்ள விநாயகர், சந்தனகருப்பணசாமி கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தனர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பட்டிவீரன்பட்டி
பட்டிவீரன்பட்டி சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோவிலில் அம்மனுக்கு 51 வகையான நெய்வேத்தியம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இதேபோல் பட்டிவீரன்பட்டி பத்ரகாளியம்மன், பகவதியம்மன், காளியம்மன், அய்யம்பாளையம் சின்ன முத்தாலம்மன், பெரிய முத்தாலம்மன் கோவில், சித்தரேவு முத்தாலம்மன் கோவில், தேவரப்பன்பட்டி முத்தாலம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வடமதுரை காளியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
சத்திரப்பட்டி அருகே மஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள பிரசித்திபெற்ற உச்சிகாளியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி நேற்று மஞ்சநாயக்கன்பட்டி வேணுகோபால் சுவாமி கோவிலில் இருந்து பக்தர்கள் 1,008 பால்குடங்கள் எடுத்து, உச்சிகாளியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இதில் மஞ்சநாயக்கன்பட்டி, வீரக்காவலசு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.