உபரிநீர் வழிந்தோடும் பாதை ரூ.4¾ கோடியில் சீரமைக்கப்படும்
மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் பாய்ந்து ஓடும் பாதை ரூ.4 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் என பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி தெரிவித்தார்.
மேட்டூர்
மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் பாய்ந்து ஓடும் பாதை ரூ.4 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் என பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி தெரிவித்தார்.
தலைமை பொறியாளர் ஆய்வு
பொதுப்பணி துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி நேற்று மேட்டூர் அணையின் பருவ கால ஆய்வை மேற்கொண்டார். அப்போது அணையின் வலது கரை, இடது கரை, கவர்னர் பாயிண்ட் உட்பட முக்கிய பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் பாய்ந்தோடும் பாதை ரூ.4 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும். இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேட்டூரில் இருந்து பாய்ந்து செல்லும் காவிரி ஆற்றில் 155 குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
பராமரிப்பு பணி
கடந்தாண்டு குருவை சாகுபடி முழுமையான அளவில் நடைபெற்று உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறையும் நேரத்தில் 16 கண் மதகுகளை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மேட்டூர் வந்த தலைமை பொறியாளரை பொதுப்பணி துறையின் மேட்டூர் நிர்வாக பொறியாளர் சிவக்குமார், உதவி நிர்வாக பொறியாளர் செல்வராஜ், அணை பிரிவு உதவி பொறியாளர் மதுசூதனன் ஆகியோர் உடனிருந்தனர்.