இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி
தஞ்சையில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மேல்நிலைநீர்த்தேக்கதொட்டி
தஞ்சை புதுப்பட்டினம் ஊராட்சி பகுதி ராதாகிருஷ்ணன் நகர் 4-வது தெரு அருகே மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டி அமைக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாகிறது. மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாக உள்ளது.
இதன் மூலம் ராதா கிருஷ்ணன் நகர், மருதுபாண்டியர் நகர், ஜோதி நகர், நடேசன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் தற்போது மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது.
இடிந்து விழும் நிலை
இதனால் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை தாக்கிபிடித்துள்ள தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. ஒரு சில பகுதிகளில் பெரிய விரிசல்களும் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி வலுவிழந்து காணப்படுகிறது.
மேலும், தொட்டியில் இருந்து நீர் கசிந்து வெளியேறி வருகிறது. இதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி கீழே விழுந்து விடும் சூழல் நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மேற்கண்ட பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியின் உறுதி தன்மையை ஆய்வு செய்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.