அபாய நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி


தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராதாநரசிம்மபுரம் ஊராட்சியில் அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டித்தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

திருமக்கோட்டை:

ராதாநரசிம்மபுரம் ஊராட்சியில் அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டித்தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

திருமக்கோட்டை அருகே உள்ள ராதாநரசிம்மபுரம் ஊராட்சியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டி 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த தொட்டியின் மூலம் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. குடிநீர் தொட்டியின் தூணில் அடிப்பகுதியில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இ்ந்த குடிநீர் தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. குடிநீர் தொட்டியின் அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு தினமும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இடித்து அகற்ற வேண்டும்

தற்போது நீர்த்தேக்க தொட்டியில் நீரேற்றாமல் நேரடியாக தண்ணீர் செல்வதால் குறிப்பிட்ட நேரம் மட்டுமே தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் பொதுமக்கள் குடிநீர் சரிவர கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் என கிராம மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றி விட்டு புதிதாக அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story