லாரியை வழிமறித்து டிரைவரிடம் ரூ.33 ஆயிரம் பறித்த கும்பல்
மார்த்தாண்டம் அருகே லாரியை வழிமறித்து டிரைவரிடம் ரூ.33 ஆயிரம் பறித்து சென்ற 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே லாரியை வழிமறித்து டிரைவரிடம் ரூ.33 ஆயிரம் பறித்து சென்ற 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
லாரி டிரைவர்
மார்த்தாண்டம் அருகே வன்னியூர் இளந்தோட்டத்து விளையை சேர்ந்தவர் பீட்டர் சுந்தர் சிங். இவருடைய மகன் பிரபின் (வயது 25), லாரி டிரைவர்.
இவர் சம்பவத்தன்று அதிகாலை 3½ மணியளவில் சிராயன்குழியிலிருந்து இரவிபுதூர்க்கடை செல்லும் சாலையில் லாரியை ஓட்டி சென்றார். அப்போது ஒரு கார் வேகமாக வந்தது. அந்த கார் திடீரென்று லாரியை வழிமறித்தபடி நிறுத்தப்பட்டது.
ரூ.33 ஆயிரம் பறிப்பு
அதைத்தொடர்ந்து அதில் இருந்து 3 பேர் கீழே இறங்கினர். அவர்கள் பிரபினிடம் தகாத வார்த்தைகள் பேசியபடி லாரியில் ஏறினார்கள். பின்னர் அங்கு பிரபின் வைத்து இருந்த ரூ.33 ஆயிரத்தை பறித்துக்கொண்டு, மிரட்டல் விடுத்து சென்று விட்டனர்.
இது குறித்து பிரபின் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினீஷ் பாபு விசாரணை நடத்தினார். அப்போது காரை ஓட்டி வந்தவர் திக்குறிச்சியை சேர்ந்த நிஜோ, அவருடன் வந்தவர்கள் கிருஷ்ணன், மெர்லின் என்பது தெரிய வந்தது. அதன்பேரில் 3 பேர் கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.