நடுரோட்டில் கவிழ்ந்த லாரி


நடுரோட்டில் கவிழ்ந்த லாரி
x

வேடசந்தூர் அருகே நடுரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உள்பட 3 பேர் உயிர் தப்பினர்.

திண்டுக்கல்

கரூரில் இருந்து 5 டன் எடை கொண்ட வேட்டி, துண்டுகளை ஏற்றிக்கொண்டு மதுரையை நோக்கி லாரி ஒன்று புறப்பட்டது. அந்த லாரியை, மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த அய்யப்பன் (வயது 39) ஓட்டினார். அவருடன் சுமைதூக்கும் தொழிலாளர்கள் பாண்டி (35), ராஜா (21) ஆகியோரும் பயணம் செய்தனர்.

கரூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூரை அடுத்த ரெங்கநாதபுரம் அருகே நேற்று அதிகாலை 5 மணி அளவில் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக தறிகெட்டு ஓடியது. ஒரு கட்டத்தில் சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்பில் மோதி நடுரோட்டில் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் அய்யப்பன், பாண்டி, ராஜா ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சாலையில் கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை போலீசார் சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து கூம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story