ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்: குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விசாரணை


ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்: குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விசாரணை
x

ஈரோட்டில், 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் நேற்று விசாரணை நடத்தினார்.

ஈரோடு

ஈரோடு

ஈரோட்டில், 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் நேற்று விசாரணை நடத்தினார்.

கருமுட்டை விற்பனை

ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுத்து அதை ஈரோடு, பெருந்துறை, சேலம், ஒசூர், திருப்பதி, திருவனந்தபுரம் போன்ற பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளில் விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பாக அந்த சிறுமியின் தாயார், 2-வது கணவர், புரோக்கர் மாலதி மற்றும் சிறுமியின் ஆதார் கார்டை மாற்றி போலியாக தயாரித்த ஈரோட்டை சேர்ந்த ஜான் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் மற்றும் சென்னையில் உள்ள மருத்துவ துறை உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த சிறுமிக்கு அவரது தாயாரின் 2-வது கணவர் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாகவும் வழக்கு விசாரணை நடக்கிறது.

ஆணைய தலைவர்

அந்த சிறுமி பாதுகாப்பு காரணமாக, ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். இதற்கிடையில் அவர் மன உளைச்சலால் கழிவறையில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த பிரச்சினையில் சிக்கி உள்ள ஈரோடு, பெருந்துறை உள்பட பல்வேறு ஆஸ்பத்திரிகளின் டாக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வைத்து, சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுத்து விற்பனை செய்தது தொடர்பாக விசாரணை நேற்று நடந்தது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய விசாரணை மதியம் 2.45 மணி வரை நடந்தது.

தொடர் விசாரணை

இதில் உறுப்பினர்கள் மல்லிகை துரைராஜ், சரண்யா ஜெயகுமார், முரளிகுமார், ஈரோடு மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பிரேமாகுமாரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சரவணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.

விசாரணைக்கு பின்னர், தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமியிடம் கேட்டபோது, ''கருமுட்டை விற்பனை தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது இதுபற்றி வேறு எந்த தகவலும் கூற இயலாது'' என்றார்.


Next Story