நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொள்கலனில் ஆக்சிஜன் நிரப்பும் பணி
நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொள்கலனில் ஆக்சிஜன் நிரப்பும் பணி நடந்தது.
நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இங்கு அமைக்கப்பட்ட வார்டில் 160 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நோயாளிகளின் பயன்பாட்டுக்காக 3 ஆக்சிஜன் கொள்கலன்கள் உள்ளன. இவற்றில் ஆக்சிஜன் அளவு குறைந்ததும் வாரம்தோறும் டேங்கர் லாரியில் ஆக்சிஜனை கொண்டு வந்து நிரப்புவது வழக்கம். அதன்படி நேற்று காலையில் கொள்கலனில் ஆக்சிஜன் நிரப்பப்பட்டது.
இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் ரவிசந்திரன் கூறுகையில், ''நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 3 கொள்கலன்களில் திரவநிலை ஆக்சிஜன் உள்ளது. இவற்றில் உள்ள ஆக்சிஜன் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் ஆக்சிஜன் அளவு குறையும்பட்சத்தில் உடனடியாக நிரப்பப்படும். அதன்படி சுமார் 6 ஆயிரத்து 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொள்கலனில் திரவநிலை ஆக்சிஜனை டேங்கர் லாரி மூலம் கொண்டு வந்து நிரப்பினர். இது வழக்கமான ஒன்றுதான்'' என்றார்.