ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு விழா
தரங்கம்பாடி கடற்கரையில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு விழா நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி கலந்துகொண்டு ராட்சத பலூனை வானில் பறக்கவிட்டார்.
பொறையாறு:
தரங்கம்பாடி கடற்கரையில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு விழா நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி கலந்துகொண்டு ராட்சத பலூனை வானில் பறக்கவிட்டார்.
ஓசோன் காற்று
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் ஏப்ரல்,மே, ஜூன்,ஜூலை ஆகிய மாதங்களில் ஓசோன் காற்று அதிகமாக வீசுகிறது. உடல் நலத்திற்கு நன்மை தரக்கூடிய இந்த ஓசோன் காற்றை சுவாசிக்க இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், டென்மார்க், ஜெர்மனி,சிங்கப்பூர், அமெரிக்கா,ஆஸ்திரிலியா,பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
இந்த நிலையில் ஓசோன் காற்றின் நன்மைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை கடற்கரையில் நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தஞ்சாவூர் மண்டலம்,மயிலாடுறை மாவட்டம் மற்றும் தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு விழா நடந்தது.
பலூனை பறக்க விட்டனர்
விழாவில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மாதவன் ஆகியோர் ஓசோன் காற்றின் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கியாஸ் பலூனை ஆகாயத்தில் பறக்கவிட்டனர். தொடர்ந்து ஓசோன் காற்றின் மகத்துவம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பேசினார்.
இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரிசங்கர், ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி குமரவேல், மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், பேரூராட்சி துணை தலைவர் பொன்.ராஜேந்திரன், செயல் அலுவலர் பூபதி கமலக்கண்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், சுற்றுலா அலுவலர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.