5 ஜி அலைக்கற்றை ரூ.1½ லட்சம் கோடிக்கு ஏலம் போனதன் பின்னணி என்ன?
ரூ.5 லட்சம் கோடி எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 ஜி அலைக்கற்றை ரூ.1½ லட்சம் கோடிக்கு ஏலம் போனதன் பின்னணியில் பெரிய சரித்திரம் இருப்பதாக ப.சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
காரைக்குடி,
ரூ.5 லட்சம் கோடி எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 ஜி அலைக்கற்றை ரூ.1½ லட்சம் கோடிக்கு ஏலம் போனதன் பின்னணியில் பெரிய சரித்திரம் இருப்பதாக ப.சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
ப.சிதம்பரம் பேட்டி
முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான ப.சிதம்பரம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரே நாடு, ஒரே தேர்தல் தவறான நடவடிக்கை ஆகும். இந்தியாவில் பல மாநிலங்கள், மொழிகள், கலாசாரங்கள், வரலாறுகள் உள்ளன. ஒரே தேர்தல் மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் முயற்சியாகும்.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என வரிசையாக ஆரம்பித்தால் வருங்காலத்தில் ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என்ற நிலை வந்துவிடும். இவை ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகார ஆட்சிக்கு வழி வகுக்கும்.
5 ஜி அலைக்கற்றை ரூ.5 லட்சம் கோடி வரை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ.1½ லட்சம் கோடிக்கு ஏலம் போனதாக கூறப்படுவதற்கு பின்னால் பெரிய சரித்திரமே உள்ளதாக குற்றம்சாட்டுகிறேன். அதனால் யாருக்கு பலன் என்பதை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.
பீகார் ஆட்சி மாற்றம்
பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என ஒருபுறம் கூறுகிறார்கள். மறுபுறம் பிளாஸ்டிக் தேசியக்கொடியை பயன்படுத்துவது வியப்பாக உள்ளது. வேலை வாய்ப்பு குறித்த புள்ளி விவரங்கள் தவறாக காட்டப்படுகின்றன. மிக மிக கொடுமையான அளவில் வேலைவாய்ப்பின்மை உள்ளது. பீகார் ஆட்சி மாற்றத்தால் மகிழ்ச்சி அடையவோ, வருத்தம் அடையவோ தேவையில்லை.
பா.ஜ.க. இதுவரை பல மாநிலங்களில் என்ன செய்ததோ அது எதிர்வினையாகி அவர்களையே வந்து அடைந்துள்ளது.
நிதிப்பற்றாக்குறை, நடப்பு கணக்கு பற்றாக்குறை, கடன்சுமை, பணவீக்கம் இவைதான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கின்றன. இதில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது. அதன்காரணமாகவே விலைவாசி உயர்வு, மோசமான வளர்ச்சி விகிதம், பணவீக்கம் ஏற்பட்டுள்ளது.
தாங்க முடியாத நிலை
60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்று பா.ஜ.க.வினர் கேட்கின்றனர். அவர்கள் தற்போது விற்று வரும் பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியலே காங்கிரஸ் செய்த சாதனைகளுக்கு சாட்சியாகும். பா.ஜ.க. ஆட்சியாளர்களுக்கு அழிக்க முடியுமே தவிர, ஆக்க முடியாது என்பதை அவர்களின் செயல்களே நிரூபித்து வருகின்றன.
பணவீக்கம் 7 சதவீதம் என புள்ளியியல் துறை கூறுகிறது. ஆனால் உண்மை நிலை வேறானதாகும். கிராமங்களில் பணம் வீக்கம் மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் உள்ளது.
கீர்த்தி துபே என்ற 8 வயது சிறுமி பென்சில் கூட வாங்க இயலாத நிலையில் உள்ளதாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இச்சிறுமியின் மனவலியை கூட பா.ஜனதா ஆட்சியாளர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதுவே இந்தியாவின் இன்றைய நிலை. சாதாரண மக்களின் உணவின் அளவும், தரமும் குறைந்து வருகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள் வளர்ச்சி குன்றி வருகின்றனர். இதனை பா.ஜ.க. ஆட்சியாளர்களால் அறியவும், புரியவும் முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாங்குடி எம்.எல்.ஏ., நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி, மெய்யப்பன், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் அப்பச்சி சபாபதி, மாவட்ட வக்கீல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் ஆகியோர் உடன் இருந்தனர்.