கோமளாம்பிகை கோவிலில் பச்சைக்காளி -பவளக்காளி ஆட்டம்
திருக்கடையூர் அருகே மாமாகுடி கோமளாம்பிகை கோவிலில் பச்சைக்காளி -பவளக்காளி ஆட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருக்கடையூர்:
திருக்கடையூர் அருகே மாமாகுடியில் கோமளாம்பிகை என்னும் தோப்பிடையாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தை யொட்டி பச்சைக்காளி-பவளக்காளி ஆட்டம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நடந்தது. இதனையொட்டி நான்கு கால அபிஷேக ஆராதனையும், கரகம் புறப்பாடும் நடந்தது. அப்போது பச்சைக்காளி, பவளக்காளி காளி வேடம் அணிந்து காளியாட்டம், பால் காவடி, அலகு காவடி, பறவைக் காவடி உள்ளிட்ட காவடிகளுடன் அக்ரஹார குளக்கரையில் இருந்து கோவிலை சுற்றி உள்ள வீதிகள் வழியாக பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து கோமளாம்பிகை என்னும் தோப்பிடையாள் அம்மனுக்கு பால், தேன், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது.இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.