பாடைக்காவடி திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்


பாடைக்காவடி திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்
x

பாடைக்காவடி திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்

திருவாரூர்

வலங்கைமான் மகாமாரியம்மன் கோவில் பாடைக்காவடி திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் தாசில்தார் சந்தானகோபாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

மகாமாரியம்மன் கோவில்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி பாடைக்காவடி திருவிழா தமிழக அளவில் பிரசித்தி பெற்றது.

ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் பாடைகாவடி, அலகு காவடி, பன்னீர் காவடி, தொட்டில் காவடிகளை எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 10-ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 12-ந்தேதி முதல் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

பாடைக்காவடி திருவிழா

வருகிற 19-ந்தேதி இரண்டாம் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 26-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான பாடைக்காவடி திருவிழா நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காமதேனு, மயில் வாகனம் ரிஷபம், சிம்மம் மற்றும் வெள்ளி, அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெறும். அடுத்தமாதம் ஏப்ரல் 2-ந்தேதி புஷ்ப பல்லக்கு விழாவும், 9-ந்தேதி கடை ஞாயிறு விழாவும் நடைபெறும்.

முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்

வலங்கைமான் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று திருவிழாவிற்கான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் தாசில்தார் சந்தானகோபாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் திருவிழாக்காலங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், பேரூராட்சி சார்பில் குடிநீர், கழிவறை வசதிகள், சுகாதார பணிகளை மேற்கொள்ளவும், ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் தேவையான மருந்துகளுடன் கூடிய மருத்துவர் குழு 24 மணி நேரமும் பணியில் இருக்க உறுதி செய்ய வேண்டும்.

காவடிகளுக்கு அனுமதி இல்லை

திருவிழாவின்போது கோவில் உள்பிரகாரம் பகுதிகளில் நேர்த்திக்கடன் செலுத்த காவடிகளுக்கு அனுமதி இல்லை. நேர்த்திக்கடன் செலுத்தும் காவடிகள் அனைத்தும் கோவிலை சுற்றி வரும் சாலைகளை பயன்படுத்த வேண்டும். கோவில் பிரகாரம் மற்றும் அர்த்தமண்டபம் உள்ளிட்ட பக்தர்கள் அதிக அளவில் கூடும் முக்கிய பகுதிகளில் பெண் போலீசார்களை நிறுத்தி பாதுகாப்பு அளிக்க வேண்டும். கோவிலில் தினசரி நடைபெறும் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகளை இரவு 11 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும். பக்தர்கள் அனைவரும் பொதுநலன் கருதி முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என ஆலோசனை செய்யப்பட்டது.

இதில் மகாமாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் ரமணி, மேலாளர் சீனிவாசன், மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அகஸ்தியா, சரக வருவாய் ஆய்வாளர் விக்னேஸ்வரர், கிராம நிர்வாக அலுவலர் கதிரேசன், பேரூராட்சி தலைவர் சர்மிளா சிவனேசன் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story