தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்பு
திருமருகல் ஒன்றிய பகுதியில் தொடர்மழை காரணமாக 50 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திருமருகல் ஒன்றிய பகுதியில் தொடர்மழை காரணமாக 50 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் திருமருகல், சீயாத்தமங்கை, எரவாஞ்சேரி, கோட்டூர், வடகரை, ஏனங்குடி, நரிமணம், குத்தாலம், அம்பல், போலகம், வாழ்குடி உள்ளிட்ட 39 ஊராட்சிகளிலும் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி நேரடி நெல் விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் இளம் நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் அழுகி துர்நாற்றம் விசுவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
பாதிப்பு குறித்து சீயாத்தமங்கை விவசாயி பெரியமணி கூறியதாவது:- திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை, தென்பிடாகை வருவாய் கிராமத்தில் தொடர் மழையால் 50 ஏக்கர் அளவிற்கு இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்துள்ளோம். தற்போது பெய்த தொடர் மழையால் இளம் பயிர்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கி அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இந்த இழப்பை சரி செய்ய தமிழக அரசு பாரபட்சம் இன்றி உரிய கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
இடுபொருட்கள்
விவசாயி அண்ணாதுரை:- கடந்த காலங்களில் இப்பகுதிகளில் பருவம் தவறி பெய்த மழையால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். மேலும் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. இந்த நிலையில் தற்போது பெய்த மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை நீடித்து வருகிறது. இதனால் வேர் முழுவதும் அழுகி நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. எனவே அதிகாரிகள் கணக்கெடுப்பு செய்து இடு பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்றார்.