அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்


அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் ஒன்றியத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக எடுத்து செல்ல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக எடுத்து செல்ல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பா அறுவடை

நாகை மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நெல்லை விற்பனை செய்ய தமிழக அரசு சார்பில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. திருமருகல் ஒன்றியத்தில் திட்டச்சேரி, திருமருகல், சீயாத்தமங்கை, அம்பல், பில்லாளி, கோட்டூர், திருப்பயத்தாங்குடி, ஆலத்தூர், வடகரை, கொட்டாரக்குடி, காரையூர், குத்தாலம், நரிமணம், அண்ணாமண்டபம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

கொள்முதல் நிலையங்கள்

திருமருகல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையம் மூலம் வாங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

திருமருகல் ஒன்றியத்தில் பெரும்பாலான இடங்களில் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு கொண்டு செல்லப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.

தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்

இந்த நிலையில் திருமருகல் ஒன்றியத்தில் பெரும்பாலான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளியில் செயல்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு எடுத்துச் செல்லப்படாமல் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. திடீரென மழை பெய்தால் திறந்த வெளிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகும் நிலை உள்ளது.

மழை பெய்தால் நனைந்து சேதமாகும்

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், எங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.ஆனால் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து லாரிகள் அனுப்பாததால் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன.

திடீரென மழை பெய்தால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் ஏற்படும் நிலை உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகளை விரைவாக எடுத்துச் சென்று பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story