மின்மாற்றி பழுதால் தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள்
விருத்தாசலம் அருகே மின்மாற்றி பழுதானதால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே மணவாளநல்லூர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஆழ்துளை கிணறுகளை நம்பி ஆண்டுதோறும் பயிர் செய்து வருகிறார்கள்.
தற்போது உழவு செய்து, நாற்றுகள் நட்டுள்ளனர். சில இடங்களில் நெற்பயிர்கள் வளர்ந்து உள்ளது. இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையின் காரணமாக அங்குள்ள மின்மாற்றி பழுதானது.
பயிர்கள் கருகியது
இதனால் மின்சாரம் இன்றி ஆழ்துளை கிணறுகளை இயக்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். இதனால் விவசாயிகள் சாகுபடி செய்த நெற்பயிர்கள், நாற்றுகள் தண்ணீரின்றி கருகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் பயிர்களை காப்பாற்ற அருகில் உள்ள மீன் குட்டையில் இருந்து டீசல் என்ஜின் மூலம் தண்ணீரை பாய்ச்சி நெற்பயிருக்கு உயிர் கொடுத்து வருகின்றனர். பழுதான மின்மாற்றியை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள், தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மின்மாற்றியை சரிசெய்ய...
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, ஒவ்வொரு பருவத்திலும் நெற்பயிர் சாகுபடி செய்யும் போது, மழை, புயல், வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் பேரிழப்பை சந்தித்து வருகிறோம். தற்போது மின்மாற்றி பழுதடைந்ததால் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். பயிர்கள் நன்றாக வேர் பிடித்து வளர்ந்து வரும் நிலையில் தண்ணீர் கிடைக்காததால் கருகி வருகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகமும், மின்துறை அதிகாரிகளும் இதை கவனத்தில் கொண்டு மின்மாற்றியை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.