தண்ணீர் இல்லாமல் கருகும் நெற்பயிர்கள்


தண்ணீர் இல்லாமல் கருகும் நெற்பயிர்கள்
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகை அருகே தண்ணீர் இல்லாமல் கருகும் நெற்பயிரை காப்பாற்ற குடத்தில் நீர் எடுத்து ஊற்றும் முயற்சியில் விவசாயி ஈடுபட்டுள்ளார்.

நாகப்பட்டினம்


நாகை அருகே தண்ணீர் இல்லாமல் கருகும் நெற்பயிரை காப்பாற்ற குடத்தில் நீர் எடுத்து ஊற்றும் முயற்சியில் விவசாயி ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தின் நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது குறுவை நெல் சீசன் நடைபெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

இதையொட்டி நாகை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரானது முழுமையாக கடைமடை பகுதிக்கு வராததால், சில இடங்களில் விவசாயத்துக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை.

குறுவை சாகுபடி

பொதுவாக வாய்க்கால்களில் குறைந்த அளவே தண்ணீர் வருவதால் மேடான பகுதிகளுக்கு தண்ணீர் செல்வது கிடையாது. நாகை அருகே சங்கமங்கலம், நெம்மேலி, சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடி செய்யப்பட்ட வயல்கள் வெடித்து காட்சியளிக்கிறது.

மேலும் தண்ணீர் இன்றி கருகும் சூழ்நிலையும் ஏற்பட்டு உள்ளது. இதனால் அருகில் உள்ள குளம், குட்டைகளில் இருந்து குடத்தில் தண்ணீரை எடுத்து வந்து கருகும் நிலையில் உள்ள இளம் பயிர்களில் ஊற்றி காப்பாற்றும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் வேறு வழியின்றி தங்களது கால்நடைகளையும் பயிர்களில் மேச்சலுக்கு விடுகின்றனர்.

நேரடி நெல் விதைப்பு

கீழ்வேளூர் வட்டாரத்தில் உள்ள 43 கிராமங்களில் தற்போது 17 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நேரடி நெல் விதைப்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இங்கு முறையான நீர்ப்பாசனம் இல்லாத காரணத்தால் பல்வேறு பகுதிகளில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

கீழ்வேளூர் ஒன்றியம் தெற்கு நெம்மேலி கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விதைப்பு செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

முழுமையாக தூர்வாராததால்...

இது குறித்து நெம்மேலி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், நெம்மேலி கிராமத்தின் முக்கிய பாசன வாய்க்காலான நெம்மேலி வாய்க்கால் கடந்த 5 ஆண்டுகளாக அதன் தலைப்பு பகுதியான நீலப்பாடியிலிருந்து நெம்மேலி வரை முழுமையாக தூர் வாரப்படவில்லை. மேலும் வாய்க்கால் முழுவதும் காட்டாமணக்கு செடிகள் படர்ந்து காணப்படுகின்றன. இதன் காரணமாக ஓடம் போக்கி ஆற்றில் இருந்து பிரிந்து வரும் வாய்க்கால்களில் மிகக்குறைந்த அளவிற்கு நீர் வரத்து உள்ளது. இதனால் நீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகி விட்டது. ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி மேற்கொண்ட நிலையில், நீர் வரத்து இல்லாமல் போனதால் பயிர்கள் கருகியதால் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம்.

இழப்பீடு வழங்க வேண்டும்

எனவே வேளாண் அதிகாரிகள் கருகிய குறுவை நெற்பயிர்களை ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் வயல்களுக்கு விவசாய எந்திரங்கள் கொண்டு செல்ல வசதியாக வயல் வெளி சாலைகளை சீரமைத்து தர அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.


Next Story