சித்தேரியில் மலைவாழ் மக்களுக்கு நெல் சாகுபடி பயிற்சி
சித்தேரியில் மலைவாழ் மக்களுக்கு நெல் சாகுபடி பயிற்சி நடந்தது.
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் சித்தேரியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து மலைவாழ் மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை வேளாண்மை உதவி இயக்குனர் மோகன் தொடங்கி வைத்து பேசும்போது, விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இயற்கை வேளாண்மை செய்வதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசினார். தர்மபுரி மாவட்ட உழவர் பயிற்சி நிலையத்தின் வேளாண்மை துணை இயக்குனர் குணசேகரன் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையில் கூடுதல் லாபம் பெரும் வழிமுறைகள் குறித்தும், உழவர் அட்டை, பாரத பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டம், உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்து விளக்கி கூறினார்.
இயற்கை வேளாண்மை பயிற்றுனர் பெருமாள் இயற்கை வேளாண்மையில் இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறுவது, நாற்றங்கால் பராமரிப்பு தொழில்நுட்பங்கள், பாரம்பரிய நெல் ரகங்களில் உள்ள மருத்துவ குணாதிசயங்கள் குறித்து விளக்கம் அளித்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தம்மாள், உதவி தொழில்நுட்ப மேலாளர் திருப்பதி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன் செய்திருந்தார்.