நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
குறுவை நெல் சாகுபடி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சீர்காழி, கைவிளான்சேரி, அத்தியூர், விளந்திடசமுத்திரம், திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, அகணி, வள்ளுவக்குடி, புங்கனூர், நிம்மேலி, மருதங்குடி, கொண்டல், ஆதமங்கலம், பெருமங்கலம், கன்னியாகுடி, திருப்புன்கூர், கதிராமங்கலம், எடகுடி வடபாதி, மங்கைமடம், திருவெண்காடு, காத்திருப்பு, நாங்கூர், அல்லிவிளாகம், கொள்ளிடம், புத்தூர், எடமணல், அரசூர், குன்னம், பெரம்பூர் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் மின் மோட்டாரை பயன்படுத்தி குறுவை நெல் சாகுபடி செய்திருந்தனர்.
கடந்த 15 நாட்களாக இந்த பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் குறுவை அறுவடை நடந்து வருகிறது. அறுவடையான நெல்லை விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக அடுக்கி வைத்துள்ளனர். ஆனால் இதுநாள் வரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் நெல் மூட்டைகள் தேங்கி உள்ளன.
மழையில் நனைந்து சேதம்
இந்த பகுதியில் நேற்று திடீரென பெய்த கனமழையால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
நனைந்த நெல்லை மீண்டும் ஆட்களை கொண்டு காய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வள்ளுவக்குடியை சேர்ந்த விவசாயி சுந்தரேசன் கூறுகையில், 'இந்த ஆண்டு கடுமையான மின் தட்டுப்பாடு இருந்தபோதும் மின் மோட்டாரை பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்யும் பணியில் ஈடுபட்டோம். கடந்த 15 நாட்களாக அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.
கூடுதல் செலவு
இந்த நிலையில் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக அடுக்கி வைத்திருந்த நெல் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் கூடுதல் செலவு செய்து நெல்லை காய வைக்க வேண்டி உள்ளது. எனவே உடனடியாக குறுவை நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.