வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியும் கிராம பகுதிகளில் மழை இல்லாததால் நெல் விவசாயிகள் ஏமாற்றம்


வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியும் கிராம பகுதிகளில் மழை இல்லாததால் நெல் விவசாயிகள் ஏமாற்றம்
x

வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியும் ராமநாதபுரத்தை சுற்றிய பல கிராமங்களிலும் மழை இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம்


வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியும் ராமநாதபுரத்தை சுற்றிய பல கிராமங்களிலும் மழை இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

எதிர்பார்த்த மழை இல்லை

ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை வானம் பார்த்த பூமி என்று தான் சொல்ல வேண்டும். நெல் விவசாயம் என்பது மற்ற மாவட்டங்களை விட ராமநாதபுரம் மாவட்டத்தில் குறைவு தான். அதுபோல் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்து தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயமே நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசன் கடந்த 29-ந் தேதி தொடங்கியது. சீசன் தொடங்குவதற்கு முன்பே ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வந்தது.

இந்தநிலையில் மழையை எதிர்பார்த்து ராமநாதபுரம் அருகே அய்யர்மடம், சூரக்கோட்டை, பாப்பாக்குடி, காவனூர், ஆர்.எஸ்.மடை உள்ளிட்ட பல கிராமங்களிலும் பல ஏக்கரில் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து விவசாய நிலங்களில் உழுது நெல் விதைகளை தூவி உள்ளனர். இதனிடையே வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி 5 நாட்களுக்கு மேலாகியும் இதுவரையிலும் ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. மழையை எதிர்பார்த்து நெல் விதைகளை தூவி உள்ளதால் பயிர்கள் வளர்வதற்கு விவசாய நிலங்களில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.

நெல்விதைகள்

இதுபற்றி அய்யர்மடம் பகுதியை சேர்ந்த பெண் விவசாயி ராமு கூறியதாவது, மழையை எதிர்பார்த்துதான் நெல் விதைகளை தூவி உள்ளோம். நெல் விதைகளை தூவியும் இதுவரை நல்ல மழை பெய்யவில்லை நெல் விதைகளை தூவுவதற்கு முன்பு வரையிலும் நல்ல மழை பெய்தது. சீசனுக்கு முன்பே மழை பெய்ய தொடங்கி உள்ளதால் பருவமழை நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் நெல் விதைகளை தூவி விட்டோம்.மழை பெய்தால் தான் நெல் பயிர்கள் நன்றாக வளர்ந்து செழிப்பாக இருக்கும்.

கடந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட அதிக அளவு மழை பெய்ததால் நெல் விளைச்சலும் நன்றாகவே இருந்தது. இந்த ஆண்டும் மழையை எதிர்பார்த்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story