அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள்- ஈமக்கிரியை மண்டபம் நீரில் மூழ்கியது
அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள்- ஈமக்கிரியை மண்டபம் நீரில் மூழ்கியது
அய்யம்பேட்டை
கொள்ளிடம் ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கால் நெற்பயிர்கள் மற்றும் ஈமகிரியை மண்டபம் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
தென்மேற்கு பருவ மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. நேற்றுமுன்தினம் மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதையடுத்து முக்கொம்பிலிருந்தும், கல்லணையிலிருந்தும் பெருமளவு தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படுகிறது. இந்தநிலையில் அய்யம்பேட்டை அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்க தொடங்கியது. இதனால் கொள்ளிடம் ஆறு கடல் போல் காட்சியளிக்கிறது. இந்த வெள்ளப்பெருக்கினால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளான வீரமாங்குடி, தேவன்குடி, பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிக்காடு, உள்ளிக்கடை ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றின் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குறுவை நெற்பயிர்கள் மூழ்கின
குறிப்பாக பழைய மன்னியாற்று பகுதியில் ஏராளமான வயல்கள் இந்த தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்த பகுதிகளில் தற்போது நடவு செய்துள்ள குறுவை நெல் பயிரும், வளர்ச்சி பருவத்தில் உள்ள கரும்பு, வாழை பயிர்களும் நீரில் மூழ்கியது. சில இடங்களில் அறுவடைக்கு தயாரான முன் பட்ட குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. மூன்றாவது முறையாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பயிர்கள் மூழ்கியதால் இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வெள்ளப் பெருக்குடன், தற்போது இப்பகுதியில் மிதமான மழையும் பெய்வதால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். அய்யம்பேட்டை அருகே பட்டுக்குடி கிராமத்தில் உள்ள ஈமகிரியை மண்டபம் கொள்ளிடம் ஆற்றின் வெள்ள பெருக்கால் மூழ்கியது. இப்பகுதியில் நேற்று காலை முதல் மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.