மழை நீரில் சாய்ந்துள்ள நெல்மணிகள் முளைக்க தொடங்கின
மயிலாடுதுறை பகுதியில் மழைநீரில் சாய்ந்துள்ள நெல்மணிகள் முளைக்க தொடங்கின. உடனடியாக வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
மயிலாடுதுறை பகுதியில் மழைநீரில் சாய்ந்துள்ள நெல்மணிகள் முளைக்க தொடங்கின. உடனடியாக வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
நெற்பயிர்கள் சாய்ந்தன
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 1 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி பயிர்கள் செய்யப்பட்டு அறுவடை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த 5 நாட்களாக பெய்த கனமழையால் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது. மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி உள்ளிட்ட தாலுகாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் சுமார் 60 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் அறுவடை செய்ய முடியாமல் பாதி அறுவடை செய்த நிலையில் வயல்களில் அறுவடை எந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நெல்மணிகள் முளைக்க தொடங்கின
மழை தொடர்ந்து நீடித்து வருவதால் வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் நீரில் மூழ்கி அழுக தொடங்கியுள்ளன. சில இடங்களில் நெல்மணிகள் தண்ணீரில் சாய்ந்து முளைக்க தொடங்கியுள்ளன. சில வயல்களில் அறுவடை செய்த பின் உளுந்து பயிர் பயிரிடப்பட்டுள்ளது. அதுவும் இந்த மழையால் முளைக்க தொடங்கி அழுகும் தருவாயில் உள்ளது. மாவட்டத்தில் கிளை வாய்க்கால்கள் முறையாக தூர்வரப்படாததால் இது போன்ற மழைக்காலங்களில் தண்ணீர் வடியாமல் வயல்களில் தண்ணீர் தேங்கி அறுவடை செய்ய வேண்டிய நெல்மணிகள் முளைத்து அழுகும் தருவாயில் உள்ளது.
வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு
குறிப்பாக மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் ஊராட்சி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் நெல்மணிகள் முளைக்க தொடங்கியுள்ளன. எனவே பொதுப்பணித்துறையினர் கவனத்தில் கொண்டு கிளை வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும். உடனடியாக வேளாண் துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
23 சதவீதமாக உயர்த்தி கொள்முதல்
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா, தாளடி பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆனந்ததாண்டவபுரம், பொன்னூர், பாண்டூர், கீழமருதாந்தநல்லூர், மேலமருதாந்தநல்லூர், ஆக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள சி.ஆர்.1009 நெல் ரக நெற்பயிர்கள் 7 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இந்த ரக நெல்லினை கொள்முதல் செய்வதில் முன்னுரிமை காட்டாத நிலையில் இதனை தனியாருக்கு மட்டுமே விற்க வேண்டிய சூழல் உள்ளது. தற்போது பெய்த மழையால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். எனவே கொள்முதலின் போது ஈரப்பதத்தை தளர்த்தி 23 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குத்தாலம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம், வழுவூர் நெய்குப்பை, எலந்தங்குடி, மங்கநல்லூர், கப்பூர், அசிக்காடு, செங்குடி, திருவாலங்காடு, கோமல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி செய்திருந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது. மேலும் பயிரிடப்பட்டுள்ள உளுந்து, பயறு உள்ளிட்ட தானியங்களும் மழையால் அழுகும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே சேதமடைந்த நெற்பயிர்களை அரசு கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கடையூர்
திருக்கடையூர் பகுதியில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் கடந்த 4 நாட்களாக பெய்த மழையினால் தண்ணீரில் மூழ்கி சாய்ந்து உள்ளது. நேற்று இரவு பெய்த திடீர் மழையால் உளுந்து பயிர்கள் மூழ்கியுள்ளது. தற்போது வரை மழைநீர் வடியாத காரணத்தால் நெற்பயிர்கள் மீண்டும் முளைக்க தொடங்கியுள்ளது. நேற்று செம்பனார்கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருக்கடையூர், சீவகசிந்தாமணி பகுதியில் மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் ஜெயபாலன் மழையால் சேதமடைந்த வயல்களில் நெற்பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விவசாய பாதுகாப்பு சங்க தலைவர் ராமமூர்த்தி அதிகாரியிடம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது. எனவே அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆய்வின் போது வேளாண்மை உதவி அலுவலர் உதயசூரியன், கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.